அறிவுக் கருவூலமாக உள்ள நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

Report Print Rusath in நிகழ்வுகள்
46Shares

பாடசாலைகளைப் போன்று அறிவுக் கருவூலமாக நூலகங்கள் திகழ்வதால் மாணவர்கள் நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி பொது வாசிக சாலையின் நூலகர் தவராசா சிவராணி தெரிவித்தார்.

ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று (26) மாலை இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தெரிவாகிய 35 மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது நூலகர் சிவராணி தலைமையில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

மாணவர்கள் எந்த வகுப்பினராக இருந்தாலும் தமது அறிவுத் தேடலுக்குரிய இடமாக பாடசாலைகளை மாத்திரம் கருதாது பொது நூலகங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொது நூலகங்கள் என்பதை தமது அறிவு விருத்திக்கும் ஆய்வுக்கும் தேடலுக்கும் ஆக்கபூர்வ சிந்தனைக்குமான இடங்களாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நூலகங்கள் சிறப்பான வசதிகளோடு நவீன வடிவத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இலத்திரனியல் நூலக அமைப்பாகவும் சில நூலகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

எனவே, வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள் எந்த வழியிலாவது கைக்கொள்ள வேண்டும். வாசிப்பே ஒரு மனிதனை பூரணத்துவமுடையவனாக மாற்றும்.

ஆக்கபூர்வ அறிவுத் தேடலின் மூலம்தான் நம் வாழ்வு நலம் பெறும் என தமது சிறப்புரையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதேசசபைச் செயலாளர் கே.பேரின்பராசா, நூலக உதவியாளர்களான குமுதா மனோகரன், சண்முகமூர்த்தி ஷரண்யா, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் இந்துமதி விமல்ராஜ், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எஸ்.மகேந்திரன், சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ். பற்குணன், அரச மற்றும் தனியார் வங்கிகளின் அலுவலர்கள், தனிப்பட்ட பரோபகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதற்கான நிதி அனுசரணையை அரச மற்றும் தனியார் வங்கிகளும் தனிப்பட்ட பரோபகாரிகளும் வழங்கியிருந்தமையும் மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுப் பொதி, சேமிப்புக்கான உண்டியல் என்பன வழங்கப்பட்டு பாராட்டப்பட்டமையும் இந்நிகழ்வின் சிறப்பம்சங்களாகும்.

Comments