புலம்பெயர் தேசத்தில் எழுச்சி பெற்ற மாவீரர்களின் நினைவலைகள்!

Report Print Samy in நிகழ்வுகள்

கார்த்திகை 27 ஈழத் தமிழர் வரலாற்றில் கண்ணீரால் பொறிக்கப்பட்ட நாள்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூர்வதும் அவர்களுக்கு அஞ்சலி செய்வதும், மட்டுமன்றி, தமிழ் மக்களின் தேசியக் கனவின் நாயகனாக வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான கார்த்திகை 26ஆம் நாளை மனதில் இருத்தி மதிப்பளிக்கும் காலத்தால் அழி க்க முடியாத வரலாற்றுப் பதிவுகள் அவை.

அந்த வகையில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இம்முறை ஈழத்தில் தமிழ் மக்களின் வாழ்விடங்களான வடக்கு கிழக்கில் மிகவும் உணர்வெழுச்சியுடன் கடைக்கொள்ளப்பட்டன.

வடக்கு கிழக்கில் கார்த்திகை மாதத்தில் மாவீரர் வாரத்துடன் மரம் நடுகை வாரமும் இயற்கையின் பால் கொண்ட அக்கறையுடன் வெயில் உஷ்ணம் தணித்து நிழல்தரும் நிலையில் நாட்டப்படுதல் உயிர்களின் உயிர்ப்பின் உன்னதமானதோர் அம்சமாகக் கொள்ள முடியும்.

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் வரை மிகுந்த கெடுபிடிகளுக்கு மத்தியில், அதிகார வர்க்கங்களின் கண்களுக்கு தெரியாத வகையில் ஒழித்து மறைத்து தங்கள் ஆத்ம விடுதலை உணர்வை வெளிப்படுத்திக் கொண்ட தமிழ் மக்கள், இவ்வருடம் தாயகம் எங்கும் மிக வெளிப்படையாக தமிழ்த் தேசிய உணர்வை வெளிக்காட்டியது மட்டுமன்றி, தத்தமது மனங்களையும் ஆற்றுப்படுத்திக் கொண்டனர்.

இராணுவத்தினால் அடையாளமின்றி அழிக்கப்பட் ட துயிலும் இல்ல சுற்றாடல்களில் மாவீரர் நாளுக்கு ஒரு வார காலம் முன்பே துப்பரவுப் பணிகள் இடம்பெற்றதுடன் அவை சிவப்பு மஞ்சள் நிறக் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு, எழுச்சிப்படுத்தப்பட்டன.

புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம், கோப்பாய், நல்லூர், வவுனியா குடியிருப்பு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், முழங்காவில், தீவகம், சாட்டி, முள்ளிவாய்க்கால், தோராவில், வன்னிவிளங்குளம், கனகபுரம், வவுனியா வளாகம், மாங்குளம், முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இடங்களிலும், மஞ்சள் சிவப்பு வர்ணக் கொடிகளால் துயிலும் இல்லங்கள் அலங்கரிக்கப்பட்டு மாவீரர்களின் புகைப்படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்கள் நிகழ்வை ஒழுங்கமைத்தனர், அரசியல் தலைமைகளையும், அரசியல்வாதிகளையும் மக்கள் புறக்கணித்தனர்.

தங்கள் பிள்ளைகள் எங்கு விதைக்கப்பட்டனரோ, அங்கு சென்று அவர்களது பெற்றோர்கள் அஞ்சலி செய்து ஆறுதல் கொண்டனர்.

அந்த வகையில், தமிழர் தாயகத்தில் உணர்ச்சி பூர்வமாகவும் மாவீரர்களின் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலைகள் சூட்டப்பட்டும் மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டதுடன், தாயகப் பாடலும் இசைக்கப்பட்டது.

சந்தன பேழைகளின் பாடல் வரிகள் மக்களை உணர்வெழுச்சிப் படுத்தியதுடன் அவர்களின் உள்ளக் கிடைக்கைகளை வெளிப்படுத்தி கொட்டித் தீர்த்து மனஆறுதல்பட வாய்ப்பை வழங்கியது.

புலம்பெயர் ஈழத் தமிழர்கள் 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாவீரர் வாரங்களில் மாவீரர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரும் பன்னாட்டு ரீதியில் மாவீரர் தின நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

அந்தவகையில் லண்டன், அவுஸ்திரேலியா, சுவிஸ் , ஸ்கொட்லாந்து, பிரான்ஸ், நோர்வே, இத்தாலி, ஜேர்மன் மற்றும் பின்லாந்து ஆகிய இடங்களிலும் இந்தியாவில் சென்னை, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் மாவீரர் நாள் எழுச்சிபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டதுடன் விளையாட்டுப் போட்டி, கலை,கலாசார நிகழ்வுகளும், பரிசளிப்பு நிகழ்வுகளும், மிகப் பிரமாண்ட மான முறையில் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ் மக்களின் வாழ்வில் மறக்கவும் மாற்றவும் முடியாத வரலாற்றின் வாழ்வியல் நாள் கார்த்திகை 27.

லண்டனில் ‘எக்ஸெல்’ மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ தேசிய சின்னங்களைத் தாங்கிய தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. எமது தேசிய அடையாளங்களை தடை செய்து அவற்றை நாட்டு மக்கள் மனங்களில் இருந்து நீக்கும் இலங்கை அரசின் சதியை முறியடிக்கும் நோக்கில், இந்தத் தபால் தலை வெளியிடப் பட்டதாக லண்டன் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் கோல்டன் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளுடன், கலை இலக்கிய போட்டிகளுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் அஞ்சலி நிகழ்வுகளுடன் விசேட உரைகளும் ஜேர்மனி டோன் மூன் நகரில் இடம்பெற்ற நிகழ்வில் அஞ்சலி நிகழ்வுகளுடன் எழுச்சிப் பாடல்களும் நடனங்களும், இடம்பெற்றதுடன் ஜேர்மன் நாட்டவர்களும் கூட அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

நெதர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டதுடன் தமிழமுதம் இசைக்குழுவினரின் எழுச்சி கானங்கள், நடனங்கள், கவிதைகள், மற்றும் சிறப்புரைகள் என்பனவும் இடம்பெற்றன. அத்துடன் தேசிய நாள் விளையாட்டுப் போட்டியும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் வழங்குதலும் இடம்பெற்றன.

சுவிட்சர்லாந்தில், சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள், கவியரங்கம், கலை கலாசார நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியின் விசேட உரையும், பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் மண்டபம் நிறைந்த மக்கள் எழுச்சியுடன் , மாதிரிக் கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

மண்டபம் நிறைய நடு கற்கள் வைக்கப்பட்டு சிவப்பு , மஞ்சள் நிறப் பூக்களின் அலங்காரங்களினால் எழுச்சி நிறைந்திருந்தது. மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்ட துடன் நடனம், நாடகம், எழுச்சிப் பாடல்கள், கவிதை, என்பனவும் கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்கள் வழங்கலும் இடம்பெற்றன.

நோர்வே ஒஸ்லோவில் இடம்பெற்ற நிகழ்வில் நாடகம் உட்பட எழுச்சிகரமான பல கலை நிகழ்வுகளும், நியூசிலாந்தில் மவுண்ட் ரொஸ்கில் போர் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புலி கொடியும் அந்த நாட்டின் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும் பல்வேறு எழுச்சி நிகழ்வுகளுடன் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் தினத்தன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் நிகழ்த்தப்பட்ட உரையில் ஒரு பகுதி திரையில் காண்பிக்கப்பட்டதுடன் மாவீரர்களின் போராட்ட வலிகள், தியாகங்கள் குறித்து விசேட உரைகளும், சிறப்புரைகளும் இறுதியாக தமிழீழ எழுச்சிப் பாடல்களும், கவிதை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அவுஸ்திரேலியா சிட்னியில் நியூ வின்றன் மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கு கொண்டனர். சிவப்பு மஞ்சள் கொடி அலங்காரங்களுடன் இங்கும் மாதிரி மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டு, அஞ்சலிகள், வணக்கப்பாடல், வணக்க நிகழ்வுகள், சிறப்புரை என்பனவும் இடம்பெற்றதுடன் உயிர்ப்பூ வெளியீட்டகத்தின் ‘காந்தள் கரிகாலன்’ என்ற விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பதிவுகளைக் கொண்ட தமிழர் வரலாற்று ஆவணத் தொகுப்பு நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்புடன் பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கில் இடம்பெற்ற நிகழ்வில் மாவீரர் நாள் அறிக்கை ஒளிபரப்பப் பட்ட து. நோர்வே அன்னை பூபதிகலைக் கூட மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
டென்மார்க்கில் நடைபெற்ற எழுச்சி நிகழ்விலும் 2008ஆம் ஆண்டு மாவீரர் தினத்தன்று தலைவர் பிரபாகரனால் நிகழ்த்தப்பட்ட உரை வாசிக்கப்பட்டது.
மெல்போன் ஸ்பிரிங் வலே மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விலும், பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்தியாவில் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தேசியத் தலைவரின் பிறந்த தின நிகழ்வுகளும் தமிழ்த் தேசிய விரும்பிகளினால் குழுவாகவும் தனியாகவும் கடைப்பிடிக்கப்பட்டன,

சென்னை மெரினா கடற்கரையிலும், புதுச்சேரி அரிய குப்பம் பகுதியில் கப்டன் மில்லர் அரங்கில் கொளத்தூர் மணி தலைமையில் மாவீரர்களின் புகைப்படங்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றப் பட்டு மலர் அஞ்சலியும், விசேட உரை நிகழ்வும் இடம்பெற்றன.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகளுடன், தவில் நாதஸ்வர இசைக் கச்சேரியும் இடம்பெற்றது.

இராமேஸ்வரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏற்பாட்டிலும், கிருஷ்ணகிரியிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன .

மொத்தத்தில் உலகில் எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கின்றனரோ அவர்களெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட விடுதலைப் போட்டம் குறித்தும் தாயக விடுதலைக்காக களமாடி உயிர்நீத்த மாவீரர்களது தியாகம் குறித்தும் மதிப்பும் மரியாதையும் செலுத்த ஒருபோதும் பின்னி்ன்றதில்லை என்பதை வரலாற்றுப் பதிவுகள் உறுதிப்படுத்தி வருகின்றன.