கல்முனை மாநகர தை பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண தமிழருக்கு புத்துணர்ச்சி!

Report Print Nesan Nesan in விழா

கல்முனை மாநகரில் கல்முனை தமிழ் இளைஞர் சேனையால் தமிழர் திருநாளான தைப்பொங்கல் இன்று மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரில் உள்ள தமிழ் கிராமங்களான கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு மணற்சேனை ஆகிய கல்முனை பிரதேச கிராம இளைஞர்களின் ஒன்றியமாய் உருப்பெற்றுள்ள கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முழு ஏற்பாட்டில் இன்று கல்முனை பழைய பஸ் நிலைய சதுக்கத்தில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அனைத்து தமிழ் இளைஞர்களும் தங்களது கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் ஆடைகளுடன் கலந்து கொண்டிருந்ததுடன் பெண்களும் தங்களுக்கு உரித்தான கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் ஆடைகளுடன் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.டீ.கே.எஸ். ஜெயசேகர மற்றும் விசேட அதிதிகளாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவான் வெதசிங்க, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜெயநத்தி மற்றும் இந்து மதகுருமார், கலாச்சார உத்தியோகஸ்த்தர், கல்முனை தமிழ் இளைஞர் சேனை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதிகள் பொங்கல் பானைக்கு அரிசி இட்டு ஆரம்பித்து வைத்ததோடு உழவர் திருநாளை நினைவுகூரும் முகமாக வண்டியில் மாடு பூட்டி பவனி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.