கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிவராத்திரி விழா சோழர் காலத்து ஆலயமான பொலன்னறுவை சிவன் கோவிலில் அனுஷ்டிக்கப்பட்டது.
பொலன்னறுவை சிவன் கோவில் பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை மீது படையெடுத்த இராஜராஜ சோழன் சந்ததியினரால் ஸ்தாபிக்கப்பட்டது.
அக்காலப்பகுதியில் இராஜராஜ சோழன் தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தைக் கைப்பற்றினான். இதன் மூலம் இலங்கையின் வட பகுதி சோழரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயருடன் சோழப்பேரரசின் ஒரு பகுதியாக ஆனது.
போரில் அழிந்து போன அநுராதபுரத்தைக் கைவிட்டு, அதற்குத் தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவை தலைநகரம் ஆக்கப்பட்டது.
1017 ஆம் ஆண்டில் இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து அந்நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். தொடர்ந்து சோழரின் ஆட்சி இலங்கையில் 1070 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றது.
சோழர் இலங்கையில் ஒரு ஆக்கிரமிப்புப் படை என்பதாலும், சிங்கள மக்களுக்கும், சோழர்களுக்கும் இடையே நீண்ட காலப் பகை இருந்ததாலும், ஆட்சியைப் பாதுகாப்பதற்காகச் சோழர் ஏராளமான தமிழ்நாட்டுப் படைகளையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் இலங்கையில் வைத்திருக்க வேண்டி இருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இவர்கள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருந்தனர். எனவே சோழர் ஆட்சிக்காலத்தில் பல இந்துக் கோயில்கள் பொலன்னறுவையில் அமைக்கப்பட்டன.
இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்று பொலன்னறுவை. சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தலைநகராக்கப்பட்ட இந்த நகரத்தில் அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள், அலுவலர்கள், அவர்களது குடும்பத்தவர் எனப் பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
இந்துக்களான இவர்களது தேவைக்காகக் கட்டப்பட்டனவே பொலன்னறுவை இந்துக் கோயில்கள். இங்கே பத்துச் சிவன் கோயில்களும், ஐந்து விஷ்ணு கோயில்களும், ஒரு காளி கோயிலுமாகப் பதினாறு இந்துக் கோயில்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளன.
இவை அனைத்துமே சோழர் காலத்தில் கட்டப்பட்டவை என்பதற்கில்லை. ஒன்றிரண்டு கோயில்கள் மட்டுமே அவ்வாறு கூறத்தக்கவை. பாண்டியர் காலத்திலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.கலிங்க மாகனின் காலத்திலும் இவற்றுட் சில கட்டப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.
முன்குறிப்பிடப்பட்ட பதினாறு கோயில்களுக்கும், பெயர்கள் இருந்திருக்கும். எனினும், இவை அனைத்தும் அறியப்படவில்லை. இலங்கைத் தொல்பொருள் துறையினர் இவற்றை எண்கள் மூலம் அடையாளம் காண்கின்றனர்.
சிவ தேவாலயங்களுக்கு முதலாம் சிவ தேவாலயம், இரண்டாம் சிவ தேவாலயம் என்றவாறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுள் சோழர் காலத்தில் வானவன் மாதேவி ஈஸ்வரம் என அழைக்கப்பட்ட இரண்டாம் சிவ தேவாலயமே முழுமையாகப் பேணப்பட்ட நிலையில் உள்ளது.
இது தவிர ஐந்தாம் சிவ தேவாலயமும் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது. ஏனையவற்றுள் பெரும்பாலானவை அடித்தளம் முதலான குறைந்தளவு தடயங்களையே கொண்டுள்ளன.
முழுமையாகப் பேணப்பட்டுள்ள வானவன் மாதேவி ஈஸ்வரமும், குறிப்பிடத்தக்க கட்டடப்பகுதிகள் எஞ்சியுள்ள வேறு சில கோயில்களும், அவற்றின் கட்டடக்கலைப் பாணியை ஆதாரமாக வைத்துச் சோழர் காலக் கோயில்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் காணப்பட்ட கல்வெட்டின் துணை கொண்டு அது முதலாவது இராஜேந்திர சோழனின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
முதலாவது சிவ தேவாலயம் பாண்டியர் கட்டடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்டது. இது பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது.
போதிய சான்றுகள் காணப்படாமையால் ஏனையவற்றின் காலத்தை சரிவர அறியக் கிடைக்கவில்லை.இங்கே கட்டப்பட்ட பெரும்பாலான இந்துக் கோயில்கள் அளவிற் சிறியன.
இங்கே வாழ்ந்த இந்துக்களிற் பலர் இவ்விடங்களில் நிரந்தரமான ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்க முடியாது. அத்துடன், உள்ளூர் மக்களை மதம் மாற்றும் முயற்சியிலும் சோழர்கள் ஈடுபடவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கட்டப்பட்டது போன்ற பெரிய கோயில்கள் இலங்கையில் சோழர்களால் கட்டப்படவில்லை.
வானவன் மாதேவி ஈஸ்வரத்தின் அமைப்பு சோழர் காலத் திராவிடக் கட்டடக்கலைப் பாணியைச் சேர்ந்தது. இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஏனைய கோயில்களும், இப்பாணியையே பின்பற்றியிருக்கும் எனலாம்.
வானவன் மாதேவி ஈச்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலன்னறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும்.
10 ஆம் நூற்றாண்டின் இறுதி தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய சோழர்கள் அமைத்த கோயில்களுள் முழுமையாக எஞ்சியுள்ளது இதுவேயாகும்.
இக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆரம்பகாலக் கல்வெட்டு சான்றைக் கொண்டு, இக்கோயில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது.
இராஜராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் தாயின் பெயர் வானவன் மாதேவி என அறியப்படுகின்றது. எனவே தனது தாயின் பெயராலேயே இந்தக் கோயிலை அவன் அமைத்திருக்கக் கூடும்.
வானவன் மாதேவி ஈஸ்வரம், திராவிடக் கட்டடக்கலையின், சோழர் பாணியின் ஆரம்ப காலத்தைப் பிரதிபலிக்கின்றது. சோழர்களின் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைப் படைப்புகளில் இக்கோயிலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இக்கட்டிடம் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட கோயில்களைப் போலன்றி சிறிய கருவறையையும், அதன் முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்டதாக அமைந்துள்ளது.
கருவறையின் வெளிப்புறம், 20 அடி 6 அங்குல அளவு கொண்ட சதுர வடிவமானது. உட்புறம், 9 அடி 4 அங்குல சதுரம் ஆகும். இதிலிருந்து அதன் கருவறைச் சுவர் 5 அடி 6 அங்குலத் தடிப்புக் கொண்டது என அறிய முடிகின்றது.
இதன் முன் மண்டபம் 16 அடி நீளமும், 9 அடி 4 அங்குல அகலமும் கொண்டது. கருவறையின் மீது அமைந்துள்ள விமானம், நிலத்திலிருந்து 31 அடி 9 அங்குல உயரம் கொண்டதாக உள்ளது.