தடைகள் பல தாண்டி நடைபெற்று முடிந்தது அன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி

Report Print Kumar in கால்பந்து

தேசத்தின் வேர்கள் அமைப்பினால் அன்னை பூபதியின் 30வது நினைவு தினத்தினை முன்னிட்டு நடத்துகின்ற உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (18) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில், அமைப்பின் தலைவர் கணேசன் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய இறுதிப் போட்டி புன்னச்சோலை கோப்றா அணி மற்றும் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.

போட்டி ஆரம்பித்து 08 நிமிடங்களில் கோப்றா அணி கோல் காப்பாளரின் முறையற்ற விளையாட்டு காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கோப்றா அணி வீரர்கள் வெளிநடப்புச் செய்தமையால் போட்டி இடைநிறுத்தப்பட்டு இறுதியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, முதலிடத்தை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியும், இரண்டாமிடத்தை புன்னைச்சோலை கோப்றா அணியும் பெற்றது.

சிறந்த கோல் காப்பாளருக்கான கிண்ணத்தை புன்னைச்சோலை கோப்றா அணி வீரரும், சிறந்த விளையாட்டு வீரருக்கான கிண்ணத்தை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி வீரரும் பெற்றுக் கொண்டனர்.

அன்னை பூபதியின் நினைவு தினத்தை யாரும் எவ்விதத்திலும் தங்களின் அனுமதியின்றி நடாத்தக் கூடாது என்று அன்னை பூபதியின் பிள்ளைகளின் பொலிஸ் நிலைய முறைப்பாட்டினைத் தொடர்ந்து இப்போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்கின்ற நிலையில் போட்டி ஏற்பாட்டாளர்களின் பாரிய முயற்சியால் அன்னை பூபதியின் பிள்ளைகளின் அனுமதியினைப் பெற்று போராட்டத்தின் மத்தியில் இந்நிகழ்வினை நடத்திமுடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.