உலக சாம்பியனை வீழ்த்தியது உருகுவே

Report Print Dias Dias in கால்பந்து

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் எடின்சன் கவானி 2 கோல்கள் அடிக்க 2-1 என போர்த்துகல் அணியை வென்று காலிறுதிக்கு நுழைந்தது உருகுவே.

மெஸ்ஸியின் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து ரொனால்டோவின் போர்த்துகல் அணியும் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

துவங்கியது நாக் அவுட்

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்கியுள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. அடுத்து நடந்த ஆட்டத்தில் உருகுவே 2-1 என போர்த்துகல்லை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

இந்த உலகக் கோப்பையில்

இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த உருகுவே, லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. எகிப்தை 1-0, சவுதி அரேபியாவை 1-0, ரஷ்யாவை 3-0 என வென்றது. போர்த்துகல் 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, 2ல் டிரா செய்தது.

முதல் ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோலடிக்க 3-3 என ஸ்பெயினுடன் டிரா செய்தது. மொராக்கோவை 1-0 என்ற வென்றது. கடைசி ஆட்டத்தில் ஈரானுடன் 1-1 என டிரா செய்தது.

ரொனால்டோ கோலடிக்கவில்லை

இன்று நடந்த ஆட்டத்தில் 67 சதவீத நேரம் பந்து போர்த்துகல் அணியிடமே இருந்தது. ஆனால், உருகுவேயின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாமல் திணறியது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ லீக் ஆட்டங்களில் ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்துள்ளார். இதுவரை நாக் அவுட் சுற்றில் ஒரு கோல் கூட ரொனால்டோ அடித்ததில்லை. அந்த ராசி அவருக்கு தொடர்கிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் கோல் ஏதும் அடிக்கவில்லை.

கவானி அபாரம்

ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே கவானி முதல் கோலடிக்க 1-0 என உருகுவே முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் பீபே கோலடிக்க 1-1 என போர்த்துகல் சமநிலையை உருவாக்கியது. 62வது நிமிடத்தில் கவானி மீண்டும் கோலடிக்க 2-1 என உருகுவே முன்னிலை பெற்றது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வென்று காலிறுதிக்கு முன்னேறியது உருகுவே. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து ரொனால்டோவின் போர்த்துகல் அணியும் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது.