உலகக் கோப்பையில் மிகவும் பரபரப்பான ஆட்டம்!! சொந்த நாட்டில் கண்ணீருடன் வெளியேறிய ரஷ்யா

Report Print Dias Dias in கால்பந்து

21ஆவது ஃபிபா உலக்கிண்ண காலபந்து போட்டிகள் வெகு கோலாகலமாக தற்போது ரஸ்யாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், இன்றைய ஆட்டத்தின் போது தனது சொந்த மண்ணிலேயே ரஸ்யா தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது.

இந்நிலையில், இதுதான் உலகக் கோப்பையில் மிகவும் பரபரப்பான ஆட்டம் என்று சொல்லும் அளவுக்கு இன்றைய தினம் ரஷ்யாவும், குரேஷியாவும் மாறி மாறி கோலடிக்க, 2-2 என ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

அதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என ரஷ்யாவை வென்று அரை இறுதிக்கு நுழைந்தது குரேஷியா.

கடந்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகி, 28ஆம் திகதி வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3ஆம் திகதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இடம்பெற்றன.

இந்த உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கிய நிலையில் காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டின.

உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடின. நேற்று நடந்த ஆட்டங்களில் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வென்று முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என பிரேசிலை வென்றது. இன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 என ஸ்வீடனை வென்றது. மற்றொரு காலிறுதியில் குரேஷியா பெனால்டி ஷூட்அவுட்டில் 4-3 என ரஷ்யாவை வென்றது.

ரஷ்யா கடந்து வந்த பாதை

இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த ரஷ்யா லீக் சுற்றில் 3ல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று அசத்தியது. அடுத்தது சலாவின் எகிப்தை 3-1 என்று வென்றது. உருகுவேயிடம் 3-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. தனிநாடானப் பிறகு நான்காவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் ரஷ்யா, முதல் முறையாக காலிறுதியில் விளையாடுகிறது.

குரேஷியா கடந்து வந்த பாதை

இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா மூன்று ஆட்டங்களிலும் வென்றது. நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் குரேஷியா, 2வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது,

சூப்பர் ஆட்டம்

இன்று நடந்த கடைசி காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவும், குரேஷியாவும் மோதின. இதில் 64 சதவீத நேரம் பந்து குரேஷியாவிடம் இருந்தது. துவக்கத்தில் இருந்தே அந்த அணி மிரட்டலாக விளையாடியது. 31வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேவ் சூப்பர் கோல் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் நான்காவது கோல் இது. அதையடுத்து ரஷ்யா 1-0 என முன்னிலை பெற்றது. 39வது நிமிடத்தில் குரேஷியாவின் கிராமாரிக் கோலடித்து 1-1 என சமநிலையை உருவாக்கினார்.

குரேஷியா மிரட்டல் வெற்றி

ஆட்டம் 1-1 என முடிந்ததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 100வது நிமிடத்தில் விடா கோலடிக்க குரேஷியா 2-1 என முன்னிலை பெற்றது. 115 நிமிடத்தில் மரியோ பெர்னான்டஸ் கோலடிக்க 2-2 என மீண்டும் சமநிலை உருவானது. ஆட்டம் 2-2 என முடிந்ததால், பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குரேஷியாவின் புரோஜோவிக், மோட்ரிக், விடா, ராகிடிக் ஆகியோர் கோலடித்தனர். கோவாசிக் கோலடிக்கத் தவறினார். ரஷ்யாவின் ட்ஜாகோவா, இக்னாஷிவிச், குஸ்யேவ் கோலடிக்க, ஸ்மோலோவ், பெர்னான்டஸ் கோலடிக்கத் தவறினர். அதையடுத்து 4-3 என வென்று குரேஷியா அரை இறுதிக்கு முன்னேறியது.