உலகக் கோப்பையில் இங்கிலாந்தை தெறிக்கவிட்ட பெல்ஜியம்! துவக்கமே அசத்தல்

Report Print Dias Dias in கால்பந்து
326Shares

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: 21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் 3வது இடத்துக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது பெல்ஜியம்.

ரஷ்யாவில் நடக்கும் 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவை எட்டவுள்ளது. நாளை இரவு நடக்கும் பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் மோதவுள்ளன.

அதற்கு முன், 3வது இடத்துக்கான ஆட்டம் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது.

இதில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது பெல்ஜியம்,.

1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடின. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்லவுள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன.

இங்கிலாந்து பரிதாபம்

இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து, லீக் சுற்றில் 3ல் 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றது. துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்ற இங்கிலாந்து, கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் கொலம்பியாவை வென்றது.

கால் இறுதியில் ஸ்வீடனை 2-0 என வென்றது. அரை இறுதியில் குரேஷியாவிடம் 2-1 என தோல்வி அடைந்தது.

பெல்ஜியம் அபாரம்

இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது. ஜி பிரிவில் பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான பிரேசிலை 2-1 என வென்றது. அரை இறுதியில் பிரான்ஸிடம் 1-0 என தோல்வியடைந்தது.

முன்னேறுமா பெல்ஜியம்

தற்போது 13வது உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது. இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற போதும், மிகவும் வலுவான அணியாக பெல்ஜியம் உள்ளது.

மூன்றாவது இடத்தைப் பிடித்து உலகக் கோப்பையில் தனது சிறப்பான இடத்தைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

துவக்கமே அசத்தல்

உலகக் கோப்பையில் 3வது இடத்தைப் பிடிப்பதற்கான ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே மியூனியர் கோலடிக்க 1-0 என பெல்ஜியம் முன்னிலை பெற்றது.

முதல் பாதி இறுதியில் 1-0 என பெல்ஜியம் முன்னிலையை தக்க வைத்தது. 82வது நிமிடத்தில் ஈடன் ஹசார்ட் கோலடிக்க பெல்ஜியம் 2-0 என முன்னிலை பெற்றது. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று 3-வது இடத்தைப் பிடித்தது பெல்ஜியம். இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக பெல்ஜியத்திடம் தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து. மேலும் இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் மிகவும் மோசமான ஆட்டமாகவும் இது அமைந்தது.