பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கொடூரமாக படுகொலை - இலங்கையர்கள் மூவர் கைது

Report Print Vethu Vethu in பிரான்ஸ்
1923Shares

பிரான்ஸின் தலைநகர் பரிஸின் புறநகர் பகுதியான குசன்வீலில் இலங்கையை சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் வீடொன்றில் இருந்து 56 வயதுடைய ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர்.

அவர் அந்த வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த 52 மற்றும் 42 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களான இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டவரது வீட்டில் வாடகை இன்றி வசித்துவந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சமயம் இருவரும் மது போதையில் இருந்தனர் என்று காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

கொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபர் ஒருவரும் பின்னர் கைதாகியுள்ளார். இலங்கையரான அவரது விபரங்கள் வெளியாகவில்லை.

கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந்து தடுத்து வைத்து இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யபட்ட நபர் கண்ணாடி அணிந்து ஊன்றுகோலின் உதவியுடன் வாழ்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரை வீதிகளில் அதிகம் காணக் கிடைக்காதென அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை சம்பவம் இடம்பெற்ற வீட்டில் எப்போதும் கொலை செய்யப்பட்டவருக்கு மேலதிகமாக 3 ஆண்கள் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவர்கள் பெரும்பாலான நேரங்களில் குடிபோதையிலேயே இருப்பார்கள் என அயலவர் ஒருவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பான விசாரணைகளை குசன்வீல் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.