இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்ட துறை பாரிய பங்கு வகிக்கிறது.
எனினும் நாட்டின் வளர்ச்சியக்காக பாடுபடும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள கொடுக்கல் வாங்கல்கள் இன்று வரை பெரும் பிரச்சினையாகவே உள்ளது.
தமது உழைப்புக்கான ஊதியத்தை போராடி பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏழு நாட்களாக தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு வேண்டி பெருந்தோட்ட பகுதிகளை அண்டிய நகரப்பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது வருகின்றது. இந்தப் போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன.
இந்த நிலையில் மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றினை மஸ்கெலியா பொலிஸார் நீதிமன்றத்தில் பெற்றுள்ளனர்.
1000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும், ஏமாற்று கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் படியும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆட்சியை தோற்கடித்த நல்லாட்சியை உருவாக்குவதில் மலையக மக்களின் பங்கும் அளப்பரியதாகும்.
எனினும் பல நாட்களாக தொடரும் ஆர்ப்பாட்டத்தை ஏன் சமகால அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
தமது நியாயாமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசும், ஊடகங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமலின் சிறு விபத்தை பெரிய விபத்தாக்கி, அவரை பிரபல்யமாக்கிவிட்டனர், தொழிலாளர்களின் கோரிக்கைகளை முடக்கிவிட்டனர்.
கடந்த ஆட்சியில் பல மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நாமல் ராஜபக்ஸவுக்கு நேற்று விளையாடும்போது ஒரு சிறிய காயமே ஏற்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் பரவலாக வெளிவந்தன.
சமூக வலைத்தளங்களிலும் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வரை வைரலாக பரவி வருகின்றன.
எனினும் தமது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள அடிப்படை உரிமைகளை வேண்டி போராடும் மலையக மக்களை யாரும் கண்டுகொள்ளாதது ஏன்? நல்லாட்சி அரசாங்கம் இதற்கு பதில் தருமா? என மலையக மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.