சம்பிக்கவின் வாகனத்தில் மோதி படுகாயமடைந்த இளைஞர் வீடு திரும்பினார்!

Report Print Aasim in ஆரோக்கியம்
88Shares

பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று முன்தினம் வீடுதிரும்பியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதி இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தொன்றில் சந்தீப் சம்பத் என்றொரு இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் மோதுண்டு கடும் சேதமடைந்திருந்தது.

இதன் போது சந்தீப் சம்பத் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் ராகம புனருத்தாபன மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே விபத்து நடைபெற்ற சமயத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது வாகனத்தைச் செலுத்தி வந்ததை கண்ணால் கண்ட சாட்சிகள் இருப்பதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்த போதிலும், பொலிசார் தமது அறிக்கையில் அதனை மறுத்திருந்தனர்.

இதன் காரணமாக சந்தீப் சம்பத்திற்கு நீதி கிடைக்காத நிலையில் அவரது பெற்றோர் கடுமையான போராட்டங்களுடன் தமது மகனைப் பிழைக்க வைப்பதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

ராகம புனருத்தாபன மருத்துவமனையின் சிகிச்சையின் பின்னர் தற்போது ஓரளவு உடல்நலம் தேறிய நிலையில் சந்தீப் சம்பத் வீடு திரும்பியுள்ளார்.

எனினும் இதுவரை சமநிலையில் எழுந்து நடமாட முடியாத நிலையில் இருக்கும் சந்தீப்புக்கு எதிர்வரும் 18ம் திகதி இன்னோர் சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

Comments