ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேரறிவாளன், தமிழக அரசிடம் பரோல் விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். 'என் மகனை விடுவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர்.
அவர் உடல்நலமில்லாமல் இருப்பதைக் கேள்விப்பட்டதில் இருந்து எனக்கும் உடல்நலன் பாதிக்கப்பட்டு விட்டது' எனக் கலங்குகிறார் அற்புதம் அம்மாள்.
வேலூர் சிறையில் வடமாநில கைதி ராஜேஷ் கண்ணா என்பவரால், கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானார் பேரறிவாளன்.
இது குறித்து விசாரணை நடத்திய சிறை அதிகாரிகள், சிறைத்துறை தலைவருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக பரோலில் செல்ல விண்ணப்பிக்காமல் இருந்த பேரறிவாளன், முதன்முறையாக பரோல் விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வந்த வேளையில், உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.
அற்புதம்மாளிடம் பேசினோம். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குப்பா...நான்கு நாட்களாகவே முதல்வரை சந்திக்கச் செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன்.
யாரையும் பார்க்கவிடலை, அமைச்சர்களே வராண்டாவில் நிக்கறாங்க. போறவங்க எல்லாம் திரும்பி வராங்க என்று சொன்னார்கள்.
என் மகனை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார்.
நான் நேரில் சென்று பார்த்தபோது, ஒரு தாயின் வேதனையைப் புரிந்து கொண்டு பரிவோடு பேசினார் முதல்வர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் பரோல் விடுப்பு மனுவை கொடுக்கச் சென்றிருந்தேன்.
என்னிடம் மனுவை வாங்கிய செயலாளர் ஒருவர், ' சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்ட தகவலைக் கேள்விப்பட்டு, அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார் முதல்வர். மிகுந்த வருத்தப்பட்டார். இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். விரைவில் நல்ல தகவலை முதல்வர் அறிவிப்பார்' என நம்பிக்கையோடு சொன்னார்.
எங்களுக்கு நல்லது நடக்க வேண்டிய நேரத்தில், முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது.
அதிகாரிகளிடம் பேசினால், ' முதல்வர் வந்தால்தான் பரோல் பற்றிய முடிவை எடுக்க முடியும்' எனச் சொல்கின்றனர்.
கடந்த பத்து நாட்களாக வேதனையோடு வீட்டில் இருக்கிறேன்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான மனு, உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது வாய்தாக்களைத் தாண்டிச் சென்றுவிட்டது.
முதல்வர் சிகிச்சையில் இருப்பதால், காவிரி விவகாரம் உள்பட பல விஷயங்களில் அவருடைய தேவையை மக்கள் உணர்கிறார்கள்.
நாளை அவரை சந்திக்க அப்போலோ மருத்துவமனை செல்கிறேன். விரைவில் குணமாகி அவர் வீடு திரும்ப வேண்டும் எனக் கலங்கினார்.
- Vikatan