முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் அறிக்கை மட்டுமே மக்களுக்கு அளிக்கப்படுகிறது.
கடந்த 1ம் தேதியன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அறிக்கை வெளியிட்டார்.
இதன் பின்னர் முக்கிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நிலையில் இன்று காலையில் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவர் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசியதாக கூறிய சீமான், அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ச்சியாக முதல்வரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அமைச்சர்கள் கூறினார்.
இதுதான் நம்பிக்கைக்கு உரியது. அதிகாரபூர்வமானது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சீமான் கூறினார்.
பேசும் நிலையில் ஜெயலலிதா இல்லை.. தா.பாண்டியன் தகவல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும், அதிமுகவினர் யாரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இதனால் மனநிலை பாதிக்கப்படும் அதிமுக தொண்டர்கள் சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்து கொள்வதற்காக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகின்றர்.
இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய தா.பாண்டியன், முதல்வரை சந்திக்கவில்லை என்றும் அவர் தற்போது பேசும் நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன.இந்த வதந்திகளை யாரும் நம்பக் கூடாது. முதல்வரின் உடல்நிலை பற்றி தேவையற்ற வதந்திகள் பரவுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதுபோன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது.
இப்போது முதல்வர் பேசும் நிலையில் இல்லை எனவே அவர் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன் யாரும் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
முதல்வர் ஆரோக்கிய நிலையை எட்டிவிட்டாலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறியதாகவும் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.