ஜெயலலிதா உடல்நலம் குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு நேர்ந்த அவலம்!

Report Print Samy in ஆரோக்கியம்
133Shares

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக 43 பேர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக மென்பொருள் பொறியாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலர் கோ.ராமச்சந்திரன்(29), சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் சில நாள்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், முகநூலில் (பேஸ்புக்) சதீஷ் சர்மா என்ற கணக்கில் தமிழக முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறான செய்தி பதிவிடப்பட்டிருப்பதாகவும், அதனால் வதந்தி பரவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வதந்தியை பரப்பும் நோக்கில், அந்தச் செய்தியை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

அதேபோல நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ரா.ராஜ்கமல் (30), ஒரு புகார் மனு அளித்தார். அதில், குறிப்பிட்டுள்ள ஒரு இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை பணியாளர்கள் பேசுவது போல ஒரு ஆடியோ பைல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வதந்தியைப் பரப்பும் நோக்கில் போலியான ஆடியோ பைலை பதிவேற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜ்கமல் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த இரு புகார் மனுக்கள் குறித்து பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.

சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில், முகநூலில் சதீஷ் சர்மா என்ற கணக்கில் முதல்வர் குறித்து அவதூறு பரப்பியவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேனாங்குறிச்சி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.

எம்.சி.ஏ. படித்துள்ள சதீஷ்குமார், மென்பொருள் பொறியாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சதீஷ்குமாரை திங்கட்கிழமை கைது செய்தனர்.

அதேபோல இணையதளத்தில் முதல்வர் உடல்நலம் குறித்த போலியான ஆடியோ பைலை பதிவேற்றம் செய்தது மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்த மாடசாமி என்பது தெரியவந்தது.

தொழிற்படிப்பு படித்துள்ள மாடசாமி ஏ.சி.மெக்கானிக்காக வேலை செய்து வருவதும் தெரிந்தது.இவர் நடத்தும் இணையதளத்தில்தான் போலியான ஆடியோ பைல் வதந்தியைப் பரப்பும் நோக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து மாடசாமியை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.

இதுபோல முகநூல், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் முதல்வர் உடல்நலம் குறித்து வதந்தியை பரப்பும் வகையில் செயல்பட்டதாக 43 பேர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு வதந்தியைப் பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ள தகவல்களை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் நீக்கி வருகின்றனர்.

- Dina Mani

Comments