முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் நாளை வியாழக்கிழமை சென்னை வருகிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 22-ந்தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதயச் சிகிச்சை நிபுணர்கள், செயற்கை சுவாச சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள், நோய்த் தொற்று சிகிச்சை நிபுணர்கள், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழுவினர் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இன்று புதன்கிழமை அவர்கள் 21-வது நாளாக சிகிச்சையைத் தொடர்ந்தனர்.டாக்டர்களின் தீவிர சிகிச்சை காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். தீவிர சிகிச்சை பிரிவு நிபுணரான அவர் பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையை சீராக வைக்க உதவி செய்தன. அவர் சென்னையில் 2 நாட்கள் தங்கி இருந்து விட்டு பிறகு லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 8 நாட்களாக தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது தொடர்பான தகவல்களை சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அடிக்கடி வெளியிட்டு வருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு நிபுணர் சிகிச்சை அளிப்பதால், ஜெயலலிதா மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதிருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று ஜெயலலிதா சிகிச்சை குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் நாளை வியாழக்கிழமை சென்னை வர இருப்பதாக தெரிய வந்துள்ளது.
டாக்டர் ரிச்சர்ட் நாளையே முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மறு ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
உலகின் மிகச் சிறந்த டாக்டர்களில் ஒருவரான ரிச்சர்ட் சென்னையில் 5 நாட்கள் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளார். இந்த 5 நாட்களும் அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பார்.
டாக்டர் ரிச்சர்ட் உடன் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும் ஒருங்கிணைந்து சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
டாக்டர் ரிச்சர்ட் மீண்டும் நாளை வர இருப்பதால், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைவார் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறைக்குள் டாக்டர்கள், தாதிகள் தவிர வேறு யாரும் இதுவரை அனுமதிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- Maalai Malar