எம்.ஜி.ஆருக்குச் சொன்னோம்! ஜெயலலிதாவுக்குச் சொல்ல முடியவில்லை! ஹண்டே சொல்லும் இரகசியம்

Report Print Samy in ஆரோக்கியம்
371Shares

எம்.ஜி.ஆர் அப்போலோவில் அனுமதிக்கப் பட்ட ​போது, எம்.ஜி.ஆர் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கியவர் அப்போதைய அமைச்சர் ஹண்டே.

இப்போது அதே அப்போ​லோவில் ஜெயலலிதா உடல்நிலை குணமடைந்து வருகிறது. விரைவில் வீடு திரும்புவார் என்று சொல்லியதும் இதே ஹண்டே தான்.

அவர் அளித்துள்ள பேட்டி,

எம்.ஜி.ஆரின் பக்கவாதம் பிசியோதெரபி சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்தது போல் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லியுள்ளீர்களே?

ஜெயலலிதாவுக்கு இருப்பது நுரையீரல் நோய் தொற்றுதான். ஆனால், எம்.ஜி.ஆருக்கு மூளையில் இரத்தம் கட்டியதால், அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு அதற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் சளிகள் உறைந்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நுரையீரல் தொற்றைச் சரி செய்வதில் சிறப்பு நிபுணர்தான் ரிச்சர்ட் பியெல். இருமல் வந்தால்தான் சளி வெளியேறும். இருமலை வரவைப்பதற்கு பிசியோதெரபி தேவை. இந்த சிகிச்சை அளிக்கத்தான் சிங்கப்பூரில் இருந்து, இரண்டு மருத்துவர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் முதுகு மற்றும் தோள்பட்டையில் சிகிச்சை மேற்கொண்டதால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நான் மருத்துவர்களிடம் பேசியபோது அது தெரிந்தது. அதனால்தான் சீக்கிரம் வீடு திரும்பும் வாய்ப்புள்ளது என்றேன்.

ஒரு மருத்துவராக ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தொற்றுக் கிருமியால் அவருக்குத் தாக்கம் உள்ளது. தொற்றுக் கிருமிகள் தொற்றக் கூடாது என்பதற்காகத் தான் அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. கண்டிப்பாக அனுமதிக்கவும் கூடாது. தொற்றுக் கிருமியின் தாக்கத்தால் ஆரம்பத்தில் சுய நினைவுகூட இல்லாமல் இருந்து இருக்கலாம். காய்ச்சல் அதிகமாக இருந்திருக்கும். தொற்றுக் கிருமியைப் போக்க எந்த சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை இப்போது அளித்து வருகிறார்கள். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வந்தாலும், முழுமையாக அவர் செயல்பாட்டுக்கு வர கொஞ்ச நாட்கள் ஆகும்.

எம்.ஜி.ஆர். அப்போலோவில் இருந்ததற்கும், இப்போது ஜெயலலிதா அப்போலோவில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்ட போதும் எல்லோரையும் அவர் அறைக்குள் பார்க்க அனுமதித்தது கிடையாது. மூன்று பேர் ஷிப்ட் முறையில் வாசலில் உட்கார்ந்து இருப்போம். வருபவர்களிடம் நாங்களே பதில் சொல்லி அனுப்பி விடுவோம். அதற்குக் காரணம் அவருக்கும் தொற்றுக்கிருமிகள் பாதிப்பு இருந்தது. ஆனால், யார் வந்தாலும், அந்தத் தகவலை எம்.ஜி.ஆரிடம் மறக்காமல் சொல்லிவிடுவோம். இவ்வளவு நெருக்கடிகள் அப்போது கிடையாது.

எம்.ஜி.ஆருக்கு என்ன பிரச்சினை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இப்போது எதுவுமே முழுமையாக சொல்லவில்லையே?

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ​போது, அவருக்கு கிட்னி பிரச்னை இருந்தது. முதல் நாள் எங்களோடு நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். அதற்கு மறுதினம் சட்டசபை கூட்டம் நடைபெற இருந்தது. கூட்டத்தில் என்ன பேசவேண்டும் என்பதையும் அவர் எங்களுக்கு சொன்னார்.எம்.ஜி.ஆருக்கு டயாலிசிஸ் பண்ணியதில், ஏற்பட்ட பிரச்சினையால் திடீர் என மூளையில் இரத்தம் உறைந்து வாதம் ஏற்பட்டது. அதன் பிறகு கோமா நிலைக்கு சென்றதால், என்ன செய்வது என்ற குழப்பம் எங்களுக்குள் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் சுயநினைவில் இல்லை என்பதை வெளியே சொல்லுவதா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. நெடுஞ்​செழியன் `வேண்டாம்’ என்றார். ஆர்.எம்.வீரப்பன் `நடந்ததை மக்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்றார். அதன்படி நான்தான், எம்.ஜி.ஆர் சுயநினைவு கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். முக்கிய முடிவுகள் எடுக்க கேபினெட் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரவைக் குழு பல்வேறு முடிவுகளை எடுத்தோம். சட்டசபையையே எம்.ஜி.ஆர் இல்லாமல் கலைத்தோம். அது எம்.ஜி.ஆருக்கே தெரியாது. வேட்பாளர்கள் தேர்வும் நடந்தது. எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து எந்தத் தகவலையும் நாங்கள் மூடிமறைக்கவில்லை. அப்போது எம்.ஜி.ஆரை அருகில் இருந்து நான் பார்த்ததால்தான் வெளிப்படையாகத் தகவல் சொல்ல முடிந்தது. இப்போது மருத்துவமனையே அறிக்கையை வெளியிடுகிறது. அதுதான் மாற்றம்.

அ.தி.மு.க-வின் உறுப்பினராக இணைந்து, இன்று முதல்வராக கோ​லோச்சும் ஜெயலலிதாவின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதா, ‘ராமருக்கு அணில் எப்படி இருந்ததோ, அது போல எம்.ஜி.ஆருக்கு நான் இருப்பேன்’ என்று பேசி கைத்தட்டலை அள்ளினார். அதே போல் 84-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு ஜெயலலிதாவும் ஒரு காரணம். ஆனால், அதன் பிறகு அ.தி.மு.க-வில் எழுந்த கோஷ்டிப் பூசலை எம்.ஜி.ஆர் ரசிக்கவில்லை. வீரப்பன் ஒரு அணியாகவும், ஜெயலலிதா ஒரு அணியாகவும் இருந்தார்கள். அப்போதே எதையும் துணிச்சலாக செய்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க உடைந்த பிறகு, சேவல் சின்னத்தில் நின்று 27 தொகுதிகளைக் கைப்பற்றினார். ஆனால், ஜானகி அணி ஒரு இடத்தில்தான் வென்றது. அப்போதே எம்.ஜி.ஆரின் வாரிசு தான்தான் என்பதை நிரூபித்துவிட்டார். அவர் முதல்வராக இருப்பது யார் போட்ட பிச்சையும் அல்ல, அது அவருடைய உழைப்பின் பலன். அவர் ஒரு இரும்புப் பெண்.

- Vikatan

Comments