ஜெயலலிதா எப்போது வீடு திரும்ப வேண்டும்? - ஜோதிடர்களின் கணிப்பு

Report Print Samy in ஆரோக்கியம்
413Shares

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 32 நாட்கள் கடந்துவிட்டன.

இந்நிலையில், கார்டன் சமையல்காரர்கள், ஆஸ்தான ஜோதிடர்களின் வருகை என மருத்துவமனை களைகட்டத் தொடங்கிவிட்டது.

முதல்வர் எப்போது கார்டன் திரும்ப வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி தீவிர சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்றுக்காக அளிக்கப்பட்ட சிகிச்சையில் பெருமளவு குணமடைந்துவிட்டார். தற்போது கை, கால்களுக்கு தொடர் பிஸியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர் சிங்கப்பூர் மருத்துவர்கள்.

மருத்துவர்களிடம் உரையாடும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என அறிக்கையும் வெளியானது.

வேகவைத்த ஆப்பிள் துண்டுகளை சாப்பிடுகிறார், நோய் எதிர்ப்பு மருந்துகளை படிப்படியாக அவர் உடல் ஏற்றுக் கொள்கிறது என விவரித்த கார்டன் உதவியாளர் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் ஒருவாரத்தில் மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளானார்.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மற்றும் எய்ம்ஸ் குழுவின் வருகையால் இப்போது முதல்வர் தேறிவிட்டார்.

கடந்த நான்கு வாரத்துக்கும் மேலாக சசிகலா, இளவரசி, டாக்டர் சிவகுமார், ராஜமாதங்கி, விக்ரம், ஜெயானந்த் ஆகியோர் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர்.

அரசியல் பிரமுகர்களின் தொடர் வருகையால், வெளியில் எங்கும் செல்லாமல் மருத்துவமனையிலேயே தவம் கிடந்தனர். இடையில், ஓரிருமுறை சசிகலாவும் இளவரசியும் வெளியில் சென்று வந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையிலேயே உணவுகள் தயாராகி வந்தன. இதனால், மிகவும் சிரமப்பட்டனர். முதல்வர் உடல்நிலை தேற ஆரம்பித்ததும், கார்டனில் உள்ள மன்னார்குடி சமையல்காரர்களை வரவழைத்தார் சசிகலா.

மருத்துவமனையின் தரைத்தளத்திலேயே முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு தேவையான உணவுகள் தயாராக ஆரம்பித்தன.

காலையில் காபி, இட்லி, பொங்கல் என சமையல் களைகட்டுகிறது. அந்த உணவின் கூடம் அருகில் செல்வதற்கு கார்டன் உதவியாளர்களைத் தவிர, வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

கூடவே, போயஸ் கார்டனிலும் லிஃப்ட் உள்ளிட்டவற்றில் சில மாற்றங்கள் செய்யும் வேலைகளும் நடந்து வருகின்றன" என்றவர் மேலும் தொடர்ந்தார்,

இதைவிட, ஆச்சரியமான விஷயம். கடந்த வாரம் கொங்கு மண்டலத்தில் கோலோச்சும் ஜோதிடர்கள் மருத்துவமனை வந்துள்ளனர்.

கடந்த காலங்களில் கார்டனுக்கு அடிக்கடி வருகை தரும் ஜோதிடர்கள்தான் இவர்கள். நீண்ட நேரம் சசிகலாவுடன் ஆலோசனை செய்துள்ளனர்.

அவர்கள் பேசும்போது, 'முதல்வரின் கிரக சூழல்களைக் கொண்டு பார்க்கும்போது, அவர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்றபோது குறித்துக் கொடுத்த நேரம் சரியில்லை.

தவறான நேரத்தில் பதவியேற்றதால்தான், இப்படியொரு சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார். ஆனால், இப்போது அந்தக் கண்டத்தை அவர் தாண்டிவிட்டார்.

அவர் உடல்நிலை குறித்த எதிர்மறை தகவல்கள் வெளியானதும், ஒருவகையில் நல்லதுதான். இவ்வளவு நாட்களும் அவர் கார்டனில் இல்லாதது, கிரக சூழல்களின் அடிப்படையில்தான்.

வருகிற நவம்பர் 14 அல்லது 16 ஆகிய இரு தேதிகளில் ஒரு நல்ல நேரத்தில் கார்டனுக்குத் திரும்ப வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் ஜாதகம் சொல்லும் கணிப்பும் மருத்துவர்களின் தொடர் கவனிப்பு முடிவடைகிற சூழலும் ஒரேநேரத்தில் இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சசிகலா என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

கோவில்களில் விளக்கேற்றுவது முதல் பால்குடம் சுமப்பது வரையிலான அனைத்து செயல்களும், கார்டன் ஜோதிடர்களின் கணிப்புப்படியே நடத்தப்பட்டன.

ஜோதிடத்தின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா.

ஆனாலும், 'நவம்பர் 14-ம் தேதி கார்டன் திரும்புவாரா' என்ற கேள்விக்கு மருத்துவமனை நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும். முதல்வர் விரைவில் நலம் பெறட்டும்...!

- Vikatan

Comments