30 நாள் முன்னேற்றம்! தொடர் சிகிச்சை! வெளிநாடு பயணம்!

Report Print Samy in ஆரோக்கியம்
2150Shares

மாற்றம் முன்னேற்றம் என தேர்தல் நேரத்தில் கவனத்தை ஈர்த்த விளம்பரம் போல அப்பல்லோ மருத்துவமனையின் 31 நாள் சிகிச்சைக்குப் பிறகான அறிக்கையில், "சிகிச்சை -முன்னேற்றம் -ஜெயலலிதா' என்பது போல தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு மேலாக படுத்த படுக்கையாக போராடிவரும் ஜெ.வுக்கு படுக்கைப் புண்கள் உருவாகிவிட்டன.

அதற்காக அவருக்கு பவுடர்கள் மற்றும் ஸ்பிரே மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அப்பல்லோவிலிருந்து வெளிவந்த செய்திகள் அ.தி.மு.க.வினரின் மனதை கலங்கடித்து விட்டது.

ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சையில் இருந்தால் படுக்கைப் புண் வருவது சகஜம்தானே என ஒரு சிலர் சொன்னாலும், சர்க்கரை நோயாளியான ஜெ.வுக்கு படுக்கைப் புண் வந்தால் அது ஆறுவதற்கு ரொம்ப காலமாகலாம் என்பதுதான் அ.தி.மு.க.வினரின் வருத்தம்.

லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூரிலிருந்து வந்த பிசியோதெரபிஸ்ட்டு களான டாக்டர்கள் சீமா-மேரி, இது தவிர அப்பல்லோவின் டாக்டர்கள் என இத்தனை பேர் சிகிச்சையளித்தும் மெதுவான முன்னேற்றம் என்றுதானே சொல்லப்படுகிறது.

அத்துடன் படுக்கைப் புண்ணும் வந்துவிட்டதே என அ.தி.மு.க.வினர் பெரிதும் வருத்தப்பட்டார்கள். இந்நிலையில்தான், கடந்த 20-ம் தேதியிலிருந்து அப்பல்லோவில் இருந்து வரும் தகவல்களின் தன்மை மாறத் தொடங்கியது.

ஜெ.வை கட்டிலில் உள்ள திருகு எந்திரங்களின் உதவியோடு நிமிர்த்தி உட்கார வைத்திருக்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது 804 என இருந்த ஜெ.வின் சர்க்கரை அளவு தொடர் சிகிச்சையால் 230-க்கு வந்துவிட்டது.

அவருக்கு அல்ப்யூமின் என்கிற மருந்து செலுத்தப்படுகிறது என்றார்கள் அப்பல்லோ மருத்துவர்கள்."அல்ப்யூமின் என்பது உடலில் உள்ள நோயை எதிர்த்து போராடும் சக்தி கொண்டது.

உடலில் அல்ப்யூமின் அளவு சரியாக இருந்தால்தான் நோய்களை எதிர்த்து உடல் போராடும்' என அல்ப்யூமினை பற்றி விளக்கிய டாக்டர்கள் "அதை செலுத்தும் முறை நீண்ட நேரம் எடுக்கும் ஒரு மருத்துவமுறை' என்றார்கள்.

பத்து மில்லி அல்ப்யூமின் உடலில் சேர வேண்டுமென்றால் ஒருமணி நேரம் சொட்டு சொட்டாக அந்த மருந்தை செலுத்த வேண்டும்.

இப்படி 8 மணி நேரம் 80 மி.லி. மருந்தை ஜெ.வின் உடலில் செலுத்தினோம் என்கிற அப்பல்லோ டாக்டர்கள், அந்த மருந்து செலுத்திய பிறகு 48 மணி நேரம் அந்த மருந்து ஏதேனும் எதிர்வினையாற்றுகிறதா என அவரை கண்காணிக்க வேண்டும்'' என்றும் தெரிவித்தனர்.

உயிர் காக்கும் புரதச்சத்து போன்ற அல்ப்யூமின் ஜெ.வின் கல்லீரலில் ஏற்பட்ட புரதச்சத்து பற்றாக்குறையை சரி செய்துள்ளது.

31 நாட்களாக உடல் முழுக்க மருந்துகளின் கலவையால் ஊறிய ஜெ.வின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், நல்ல முன்னேற்றத்தை கண்டுபிடித்தார்கள்.

அவரது நுரையீரலில் தேங்கிக் கிடந்த தண்ணீரையும் அதிலிருந்த நிமோனியா நோய்த் தொற்றையும் தொடர்ந்து வெளியேற்றி வந்த டாக்டர்கள், அதைப் பற்றி மிகுந்த கவலை கொண்டார்கள்.

லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் நுரையீரலில் சேர்ந்த தண்ணீரால் ரத்தத்தில் குறைந்த ஆக்சிஜனை சரிசெய்ய ECMO என்கிற எந்திரத்தின் மூலம் சுத்தம் செய்தார்.

அப்படிப்பட்ட நிமோனியா கிருமி அடங்கிய தண்ணீர் ஜெ.வின் நுரையீரலில் கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் காணப்படவில்லை.

ஊசிகள் மூலம் நுரையீரலில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் டாக்டர்கள் பல்வேறு சோதனைகள் நடத்தினார்கள்.

அந்த நோய்த் தொற்றுடன் கூடிய தண்ணீர் 48 மணி நேரமாக தென்படவில்லை என்பதால் டாக்டர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

21-ம் தேதி காலையில் ஜெ.வுக்கு ஆக்சிஜன் தந்து நுரையீரலை இயக்கும் வென்டிலேட்டர் கருவியிலிருந்து வெளியே கொண்டு வரலாம் என முடிவு செய்தார்கள்.

அதற்காக T PIECE என்கிற சிறிய ஆக்சிஜன் சப்ளை செய்யும் கருவி மூலம் முயற்சி செய்தார்கள்.

முதலில் ஒரு நிமிடம் வென்டிலேட்டர் என்கிற செயற்கை சுவாசக் கருவியை நிறுத்தி ஜெ.வை இயற்கையாக சுவாசிக்க வைத்தனர்.

அந்தக் கால இடைவெளியை அதிகப்படுத்தி 5 நிமிடம் ஆக்கினார்கள். பிறகு 10 நிமிடமானது. அப்படியே அதிகரித்துக்கொண்டே சென்றார்கள்.

கடைசியில் 60 நிமிடம் வென்டி லேட்டர் உதவி இல்லாமல் ஜெ. சுவாசித்தார். அதன்பிறகு ஜெ.வை நிமிர்ந்து உட்கார வைத்தார்கள். அவர் டாக்டர்களுக்கு ஒத்துழைத்தார்.

ஸ்பைரோமீட்டர் என்கிற நீண்ட வெள்ளைக் குழாய் கொண்ட கருவியின் ஒரு முனை யை ஜெ.வின் வாயில் வைத்தனர்.

அதன் இன்னொரு முனை மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் காணப்பட்ட ப்ளாஸ்டிக் பந்துகள் அடங்கிய ஒரு கண்ணாடிப் பெட்டகத்தில் இணைக்கப்பட்டு இருந்தது.

ஜெ.வை வலுவாக ஊதச் சொன்னார்கள் டாக்டர்கள். ஜெ. வலுவாக ஊதினார். குழாயின் மறுமுனையில் இணைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டகத்தில் இருந்த பந்துகள் மேலே எழுந்தன.

ஜெ. பலமாக ஊத ஊத ஒவ்வொரு முறையும் பந்துகள் மேலே எழும்பி மறுமுனையில் இருந்த கண்ணாடிப் பெட்டகத்தின் உச்சத்தை தொட்டன.

ஜெ.வால் அதிக நேரம் ஊத முடியவில்லை. வென்டிலேட்டர் என்கிற செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்று வந்த ஜெ., இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளின் மூச்சு விடும் தன்மையை பரிசோதிக்கும் ஸ்பைரோமீட்டர் மூச்சுபயிற்சி கருவியை இயக்கியது டாக்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.

எனினும், ஜெ.வால் தொடர்ந்து வென்டிலேட்டரை விட்டு வெளியே இருக்க முடியவில்லை. மூச்சு பயிற்சியும் தொடர முடியவில்லை என்பதால் மீண்டும் சுவா சக் கருவிகள் தேவைப்பட்டன.

நுரையீரல் நோய்த் தொற்றிலிருந்து மீண்டிருந் தாலும் ஜெ.வால் ஏன் வென்டிலேட்டரை விட்டு வெளியே நிரந்தரமாக வர முடியவில்லை என மருத்துவர் கள் ஆராய்ந்த போது ஜெ.வுக்கு இதயத்தில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என கண்டுபிடித்தார்கள்.

இதயத்தின் இடது பகுதியில் உள்ள ஆட்ரியம், வலது பகுதியில் உள்ள வென்ட்ரிக் கள் இந்த இரண்டு குழாய் களுக்கு நடுவே இதயத்திற்கு வரும் ரத்தத்தை வெளியேற்றும் மிட்ரல் வால்வு (MITRAL VALVE) எனப்படும் பாகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

அது இதயத்தின் செயல்பாட்டை குறைக் கிறது. இது நுரையீரலின் செயல்பாட்டை பாதிக் கிறது என கண்டுபிடித்தார்கள்.

இந்த இதய தொற்றை குணப்படுத்த நோய் எதிர்ப்பு மருந்துகளை செலுத்தி சிகிச்சையை தொடர்ந்தார்கள்.

21-ம் தேதி ஜெ. மூச்சு பயிற்சி கருவியை டாக்டர் சொன்னதை போல இயக்கியதால் அப்பல்லோ நிர்வாகம் ஜெ. 'Interaction' எனப்படும் "சொல்வதை கேட்டு நடந்து கொள்கிறார்' என்கிற வாசகத்தை இணைத்து அறிக்கை கொடுத்தது.'Interaction' என்பதை "நன்றாக பேசுகிறார்' என மீடியாக்கள் வெளியிட்டன.

டாக்டர்களிடம் கேட்டபோது, ""சுவாசக் கருவிகள் துணையுடன் பாசிவ் பிசியோதெரபியும் தொடர்கிறது என்பதை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம்.

அப்படி இருக்கையில், நன்றாக பேசுவது சாத்தியமில்லை. கண்கள், சைகை மூலமாக குறிப்புகளை உணர்த்துகிறார். சுய நினைவுடன் உள்ளார்' என்பதுதான் இதன் அர்த்தம்'' என்றனர்.

அதிகாரிகள் மட்டத்திலோ, "சுயநினைவுடன் உள்ளார் எனப் புதிதாக சொன்னால், இலாகாக்கள் பற்றி ஆளுநரி டம் பரிந்துரைத்தபோது எப்படி இருந்தார் என்ற சட்டச் சிக்கல் வரும்.

அதனால்தான் 'Interaction' என கவனமாக அறிக்கை வந்துள்ளது'' என்றனர்.

இதுபற்றி ஜெ.வின் பெர்சனல் டாக்டரான சிவக்குமாரிடம் கேட்ட போது, ""ஜெ.வின் உடல்நிலை பிரமிக்கத்தக்க வகையில் முன்னேறியுள்ளது'' என குறிப் பிட்டார்.

அ.தி.மு.க.வின் முன் னணி தலைவர்களில் ஒருவ ரான நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை, விரைவில் அம்மா எழுந்து நடந்து வருவார்... அவ்வளவு முன்னேற்றம் அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ளது'' என்கிறார்.

ஜெ.வின் உடல்நிலை இதே நிலையில் வேகமாக முன்னேறினால் அவரை லண்டனுக்கும் மிதமான வேகத்தில் முன்னேறினால் அவரை சிங்கப்பூருக்கும் கொண்டு செல்ல சசிகலா டீம் முடிவு செய்துள்ளது.

அதற்காக நல்ல நாளான வருகிற 26-ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம்.

- Nakkheeran

Comments