முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார்!

Report Print Samy in ஆரோக்கியம்
276Shares

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சென்னைக்கு செல்லவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இது குறித்து டில்லியில் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாநில முதல்வர் என்பதால் அவரது சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ ரீதியிலான உதவியை வழங்குமாறு தமிழக அரசு தரப்பிலும் தனியார் மருத்துவமனை சார்பிலும் மத்திய சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிபுணத்துவம் பெற்ற குறிப்பிட்ட சில துறைகளின் மருத்துவர்கள் சென்னைக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினருக்குத் தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கி வருகின்றனர்.

தமிழக முதல்வர் இயல்பு நிலைக்குத் திரும்ப மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

தொற்று பரவக் கூடாது என்ற ஒரே காரணத்தால்தான் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழு நீங்கலாக, வெளி நபர்கள் அவரை சந்திக்க தனியார் மருத்துவமனை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியில் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம்தான்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறி அவர் பேசத் தொடங்கியவுடன் விரைவில் நானும் பிரதமர் மோடியும் சென்னைக்குச் சென்று அவரை நேரில் சந்திப்போம்.

தற்போதைய நிலையில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் சிலர் முதல்வரின் உடல்நிலையை விசாரித்துள்ளனர்.

பிரதமரும் நானும் நேரில் சென்றுதான் அவரது சிகிச்சைக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பது கிடையாது. அவற்றை டில்லியில் இருந்தபடியே செய்து வருகிறோம்.

சரியான நேரமும் வாய்ப்பும் அமையும் போது, நேரில் பிரதமருடன் சென்று நலம் விசாரிப்போம் என்றார் நட்டா

- Dina Mani

Comments