கார்டன் எப்போது திரும்புவார் ஜெயலலிதா? - -தவிக்கும் அப்போலோ! கலங்கும் சசிகலா

Report Print Samy in ஆரோக்கியம்

அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 55 நாட்களாக தங்கியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ' முதல்வர் உடல்நிலையில் ஏற்ற, இறக்கம் இருப்பதால் கார்டன் திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நோய்த் தொற்றின் காரணமாக, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை வாசலில் தொண்டர்களின் வழிபாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பெயல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால், நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டார் ஜெயலலிதா. ஆனாலும், நோய் எதிர்ப்பு மருந்துகளின் தாக்கத்தால் இன்னும் சில நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

நுரையீரல் நோய்த் தொற்றின் தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நேரத்திலேயே, சிறுநீரகத் தொற்றுக்கும் ஆளானார். அதற்கேற்ப சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வந்தன. பலவிதமான உடல் உபாதைகளும் இருந்ததால், அதற்கேற்ப மருந்துகள் அளிக்கப்பட்டன.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் அவ்வப்போது லண்டன் சென்று வந்தாலும், முதல்வர் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தற்போது சிங்கப்பூர் பிஸியோதெரபிஸ்ட்டுகளின் சிகிச்சை தொடர்கிறது.

அப்போலோ மருத்துவர்களே முதல்வரைக் கண்காணித்து வருகின்றனர்” என விவரிக்கும் கார்டன் ஊழியர்கள், “கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்தபடி, நவம்பர் 14 முதல் 16-ம் தேதிக்குள் எதாவது ஒரு நல்ல நேரத்தில், முதல்வர் கார்டன் திரும்பி விடுவார் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்தோம்.

அதற்கேற்ப, மருத்துவமனை நிர்வாகமும், ‘ வீடு திரும்புவதை முதல்வரே முடிவு செய்வார்’ என நம்பிக்கையோடு தெரிவித்தது. ஆனால், தொடர்ந்து இயற்கையாக சுவாசிக்கும் அளவுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த ட்ரக்கியோஸ்டமி குழாய் இன்னும் அகற்றப்படவில்லை.

ஒரு நோயாளி 72 மணி நேரம் இயற்கையான சுவாசத்தில் இருந்தால்தான், நார்மல் வார்டுக்கு மாற்றுவது குறித்து மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். அதாவது, சிகிச்சை காலத்தில் 7 மணி நேரம், 9 மணி நேரம் எனப் படிப்படியாக செயற்கை சுவாசத்தைக் குறைத்து, சோதனை செய்வார்கள்.

அப்படியே 72 மணி நேரங்கள் இயற்கையாக சுவாசித்தால், நார்மல் வார்டுக்கு மாற்றுவார்கள். ஆனால், முதல்வர் இயற்கையாக சுவாசிப்பதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. மணிக்கொரு முறை செயற்கை சுவாசம், இயற்கை சுவாசம் என மாற்றி மாற்றி பரிசோதிக்கின்றனர்.

நோயின் தாக்கம் முழுமையாக குறைந்திருந்தால், இந்நேரம் இயற்கை சுவாசத்திற்கு திரும்பியிருப்பார். கை, கால்களில் கொடுக்கப்பட்டு வந்த பிஸியோதெரபி சிகிச்சைகள் நல்ல பலனைக் கொடுத்துள்ளன. இருப்பினும், முதல்வரின் உடல் இயங்கு முறைகளில் சில அசாதாரணங்கள் ஏற்படுகின்றன.

‘மீண்டும் மருத்துவமனைக்கு வராத வகையில் பூரண நலத்தோடு திரும்ப வேண்டும்’ என சசிகலா நினைக்கிறார். முதல்வர் படும் சிரமங்களால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. திரவ உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள சூழலில் முதல்வர் கார்டன் திரும்புவதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம்” என்றார் விரிவாக.

முதல்வர் வீடு திரும்ப வேண்டும்’ என்றுதான் அப்போலோ நிர்வாகம் விரும்புகிறது. மருத்துவமனையின் இயல்பான பணிகளில் சுணக்கம் ஏற்படுவதால், மிகுந்த பதற்றத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து இரண்டு முறை மீடியாக்களில் பேட்டி அளித்தார் அப்போலோ நிர்வாகி. தற்போதுள்ள சூழலில், ‘கார்டனில் வைத்தே முதல்வருக்கான சிகிச்சைகளைத் தொடரலாம்’ என சில மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், ‘கார்டனில் இருந்தபோது கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால்தான், அப்போலோ கொண்டு வரப்பட்டார் முதல்வர். மீண்டும் ஓர் இக்கட்டான சூழலுக்கு இடம் அளித்துவிடக் கூடாது. மேலும் ஒரு பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தாலும் பரவாயில்லை’ என உறுதியாகக் கூறிவிட்டார் சசிகலா.

அதன்படியே மருத்துவமனையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார் முதல்வர்’ என்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள்.

- Vikatan

Comments