ஜெயலலிதா இரண்டு மாதங்களாக பேசவில்லை என்பது அம்பலம்!

Report Print Samy in ஆரோக்கியம்
354Shares

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா,தற்போது பேசத் தொடங்கி உள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி, நேற்று தெரிவித்தார்.

இதன் மூலம், இரண்டு மாதங்களாக அவர் பேச முடியாத நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக, செப்., 22ம் தேதி இரவு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க, லண்டன் மற்றும் சிங்கப்பூர் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்களும், அப்பல்லோ மருத்துவமனை வந்து, சிகிச்சை அளித்தனர்.

முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, கவர்னர், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வந்து சென்றனர்; அவர்களில் யாரும் முதல்வரை சந்திக்கவில்லை.

3தொகுதி தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட, அங்கீகாரக் கடிதத்தில், முதல்வர் கைரேகை இடம்பெற்று இருந்தது.இதன் மூலம், முதல்வர் கையெழுத்திட முடியாத நிலையில் இருப்பது தெரிய வந்தது.

நவ., 4ம் தேதி, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி, பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவரை சுற்றி, என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்.'உடல் நிலை முன்னேற்றத்தையும், அறிந்து கொள்கிறார். அவர் அனைத்தையும் அறிந்து கொள்வது, மகிழ்ச்சி அளிக்கிறது' என, கூறியிருந்தார்.

மீண்டும், 13ம் தேதி, பிரதாப் ரெட்டி கூறும் போது, 'முதல்வருக்கு, தொற்றுநோய் முற்றி லும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது, 'பிசியோதெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் உடல் அளவிலும், மனதளவிலும் திடமாக இருக்கிறார். வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார். அவர் புத்துணர்ச்சி பெற வேண்டி உள்ளது. அதற்காகவே, மருத்துவமனையில் உள்ளார்' என, தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில், நேற்று பிரதாப் ரெட்டி கூறியதாவது:முதல்வருக்கு ஏற்பட்ட, நோய் தொற்று முற்றிலும் குணமாகி விட்டது. உடல் நலம் நன்றாக உள்ளது. தற்போது, அவர் நடப்பதற்கு, பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வர் அறை மாற்றப்பட்டது உண்மை தான்.

எனினும், சிகிச்சையில் மாற்றமில்லை. அவரது வசதிக்காக, அறை மாற்றப்பட்டது. அவர், 90 சதவீதம் சுயமாக சுவாசிக்கிறார். சில நிமிடங்கள், 'ஸ்பீக்கர்' பயன்படுத்தி பேசுகிறார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும், சிறப்பாக செயல்படுகின்றன. அவர் வீடு திரும்பும் தேதி, முடிவு செய்யப்படவில்லை. எப்போது வீடு திரும்ப விரும்புகிறாரோ, அப்போது போகலாம். அவர் மன வலிமை கொண்டவர்.

இது, அவரது உடல்நிலை வேகமாக முன்னேற உதவியது. வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ள, அவரை ஊக்குவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இதுவரை, 'ட்ரெகோஸ் டோமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. அதாவது, தொண்டை குழாயில், மூச்சு குழாய் பொருத்தி, செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது, குழாய் அகற்றப்பட்டாலும், அவரால் முழுமையாக பேச முடியவில்லை. எனவே, ஸ்பீக்கர் மூலம் பேசுகிறார் என, முதன் முதலாக, பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், இரண்டு மாதங்களாக, அவர் பேச வில்லை என்பது தெரிகிறது.

மேலும், அவர் நடப்பதற்கு, பிசியோதெரபி பயிற்சி அளிக்கப் படுவதாக தெரிவித்துள்ளார்; அதிலிருந்து, அவர் இன்னமும் நடக்க முடியாத நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், முதல் வரின் உடலநிலை குறித்து உண்மையானதகவல்கள் சரிவர வெளியாகவில்லை; வெளியிடப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

- Dina Malar

Comments