மட்டக்களப்பில் இருதயநோய் முற்காப்பு விழிப்புணர்வுச் செயலமர்வு

Report Print Reeron Reeron in ஆரோக்கியம்
15Shares

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயநோய் சிகிச்சை பிரிவினால் மேற்கொள்ளப்படும் இருதயம் சார் நோய்களுக்கான முற்காப்பு நடவடிக்கைச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்று நடைபெற்றது.

இந்த செயலமர்வு இன்று மட்டக்களப்பு கூட்டறவுக் கல்லூரியில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.கனகசுந்தரம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க நடைபெற்ற செயலமர்வினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயநோய் சிகிச்சைப்பிரிவு வைத்தியர் ஆர்.மேகதீபன் நடத்தினார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயநோய் சிகிச்சைப்பிரிவு வைத்திய நிபுணர் கே.அருள்நிதி தலைமையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இருதயம் சார் நோய்களுக்கான முற்காப்பு நடவடிக்கைச் செயற்பாட்டின் கீழ் திணைக்களங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வுச் செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், ஒழுங்குபடுத்தலின் அடிப்படையில் இருதயம் சார் நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றைய விழிப்புணர்வுச் செயலமர்வில் நீரிழிவு நோய் மற்றும் அதன் தாக்கம், அதன் ஊடாக உருவாகும் இருதயம் சார் நோய்கள், உணவு முறையின் மாற்றத்தின் தேவை, நோய்த்தடுப்பு, உடற்பயிற்சியின் முக்கியத்துவம் உட்பட பல விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

இதில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு கூட்டுறவுக் கல்லூரி அதிபர் கே.வி.தங்கவேலு மற்றும் மட்டக்களப்பு கூட்டுறவுக் கல்லூரி பயிலுனர்கள் அடங்கலாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செயலமர்வினை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.அருளானந்தம் ஒருங்கிணைத்திருந்தார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருதய நோயைக் கட்டுப்படுத்தி சிறந்த ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் இருதயநோய் சிகிச்சைப்பிரிவு வைத்திய நிபுணர் கே.அருள்நிதி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்திய நிபுணர் கே.மேகதீபன் தெரிவித்தார்.