யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணத்தின் நூல் வெளியீட்டு விழா

Report Print Samaran Samaran in வரலாறு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின் தொல்லியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" மற்றும் "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்" ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு நாளை (18) பிற்பகல் 03 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தொல்லியல் ஆய்வு வட்டத்தலைவர் கந்தசாமி கிரிகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

தனது தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் மூலம் ஈழத்தமிழர் வரலாறு, பண்பாடு, தமிழர் மரபுரிமை தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்தி தமிழரின் இருப்பு பற்றிய விடயங்களை அறிவியல் சார்ந்தும், தொல்லியல் ஆய்வுகள் முன்வைத்த முடிவுகள் சார்ந்தும் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" என்ற நூலையும்,

ஈழம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மரபுரிமைகள் மறைந்து போகின்றன. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கம், கோரிக்கைகளின் அடிப்படையில் மரபுரிமைச் சின்னங்களை எவ்வாறு கண்டறிந்து ஆவணப்படுத்துவது என்பது தொடர்பாக "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்" என்ற நூலையும் ஆக்கியுள்ளார்.

இவ் இரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் நூல் வெளீயீட்டு குழுவினர்.

நூல் தொடர்பாக ஈழத்தமிழர் வரலாற்றுக்கு புது வழிகாட்டிய சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் சிறு கருத்துப் பதிவு.

இலங்கைத் தமிழர் வரலாறு ஆனது மூடி மறைக்கப்பட்ட வண்ணமே காணப்பட்டது ஆனால் அண்மைக் கால தொல்லியல் ஆய்வுகள் இருள் சூழ்ந்திருந்த ஈழத்தமிழர் வரலாற்றை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

அதேவேளை ஈழம் சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து ஈழத்தமிழரின் மரபுரிமைகள் மறைந்து போகின்றன. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கமும், கோரிக்கைகளும் தமிழர்கள் மத்தியில் மேலோங்கி காணப்பட்டன.

இதனால் தமிழர்களின் மரபுரிமைகள் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு, ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் ஆகிய இவ்விரு நூல்கள் வெளியீடுவதற்கு காரணம் என்னவெனில் சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழி பாடநூல் தொடர்பாக பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் தி.சிவலிங்கராஜா ஆகியோருடன் இணைந்து நடாத்திய கலந்துரையாடலின் போது அதில் கலந்துகொண்ட அந்நாட்டு தமிழ்க் கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்குரிய தமிழ் பாட நூல்களில் இடம்பெற்றிருக்கும் இலங்கை வரலாற்றைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் ஆர்வம் குறைவாக இருப்பதால் அப்பாடங்களை தமிழ் மொழிப் பாடநூல்களில் இருந்து அகற்றுமாறு கூறினர்.

இதற்கு இலங்கை வரலாற்றுப் பாட நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்த இந்நூல்களில் தமிழர் வரலாற்றையோ, தமிழர் பண்பாட்டையோ தெரிந்து கொள்ள முடியாதிருந்தமை முக்கிய காரணம் என்பதை எம்மால் உணரமுடிந்தது.

இந்நிலையில் அந்நாட்டில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக எம்மால் நடாத்தப்பட்ட கருத்தரங்குகளில் இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழர் மரபுரிமை தொடர்பான விடயதானங்களை முன்னிலைப்படுத்திக் கூறப்பட்ட போது அதில் கலந்து கொண்ட பலரும் தமது முன்னைய கருத்துக்களை மாற்றி நாம் முன்னிலைப் படுத்திய பாட விதானங்களையே தமக்குறிய வரலாற்று வரலாற்றுப் பாட நூல்களில் சேர்த்து ஆசிரியர்களுக்கான ஒரு வரலாற்றுப் பாடநூல் எழுதப்பட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

அவர்களின் வேண்டுதலை நிறைவு செய்யும் நோக்கிலேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

Latest Offers