பேரறிவாளன் மீது தாக்குதல் ஏன்? சிறைக்குள் சட்டவிரோத செயல்பாடுகள்!

Report Print Tamilini in இந்தியா
654Shares

வேலூர் மத்திய சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கொலைவெறியோடு தாக்கப்பட்டார் என்ற செய்தி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறைக்குள் ராஜேஷ் கண்ணா என்ற கைதி, பேரறிவாளனைத் தாக்கியதாக செய்தி வெளியானது.

சிறைக்குள் என்ன நடந்தது என்று வேலூர் சிறை வட்டாரங்களில் விசாரித்தோம். “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள், பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ‘வாட்ஸ்அப்’ யுவராஜ் உள்ளிட்டோர் வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்புத் தொகுதி அறைகளில் தனித் தனியாக அடைக்கப்​பட்டு உள்ளனர்.

இந்த உயர் பாதுகாப்புத் தொகுதி மூன்று வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளது. அதில், பேரறிவாளன் இருக்கும் அறைக்கு எதிர் வரிசையில் ராஜேஷ் கண்ணா என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த இவர், ஆள் கடத்தல் உட்பட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர். அவருக்கு 2002-ம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. முதலில் திருச்சி மத்திய சிறையிலும், பிறகு புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்ட ராஜேஷ் கண்ணா, கடந்த மூன்றரை ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த 14-ம் தேதி காலை 6 மணிக்கு கைதிகளின் அறைக் கதவுகள் திறக்கப்பட்டன. வெளியே வந்த ராஜேஷ் கண்ணா, நேராக பேரறி​வாளன் அறைக்குச் சென்றார். கையில் மறைத்து வைத்திருந்த இரண்டு அடி நீளமுள்ள இரும்புக்கம்பி​யால் பேரறிவாளன் தலையில் ஓங்கி அடித்​துள்ளார். என்ன நடக்கிறது என்று பேரறிவாளன் சுதாரிப்பதற்குள், கை​களிலும் தாக்கி​யுள்ளார். வலியால் துடித்த பேரறிவாளன், மயக்கமாகிவிட்டார்.

உடனே, பக்கத்தில் இருந்த கைதிகளும், சிறைக்காவலர்​களும் ஓடிவந்து பேரறிவாளனை சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். பேரறிவாளனுக்கு தலையின் முன்பகுதியில் இரும்புக்கம்பி குத்தியதில் ரத்தம் கொட்டியது. அவருக்குத் தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டன’’ என்றார்கள்.

கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது முதல் முறையாக தாக்குதல் நடந்துள்ளது. எதற்காக அவரை ராஜேஷ் கண்ணா தாக்கினார் என்று உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். “ராஜேஷ் கண்ணா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால்,

2002-ல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2011-ல் திருச்சி மத்திய சிறையில் இருந்த ராஜேஷ் கண்ணா, அங்கு கைதிகளுக்கு நன்னெறி வகுப்பு எடுக்க வந்த கன்னியாஸ் திரியை கத்தியால் குத்தியுள்ளார். செல்போன், போதை வஸ்துக்கள் போன்றவற்றை சிறைக்குள் கைதிகள் பயன்படுத்துகிறார்களா என்று கண்காணிக்க தேடுதல் குழு உள்ளது. ஆனால், இந்தத் தேடுதல் குழுவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

பெரிய பெரிய குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு வரும் சமூகவிரோதிகளுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கவும், அவர்களின் சட்டவிரோத செயல் பாடுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க பணம் வாங்குகிறார்கள். இவர்களைப் பற்றி யாரோ சிறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்கள்.

அதனால், சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்​பட்டு உள்ளது. ‘புகார் செய்தது பேரறிவாளன்தான். அதனால் உன்னை சாதாரண சிறைக்கு மாற்றப்​போகிறார்கள்’ என்று தேடுதல் குழுவைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் கண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அதுதான், இந்தத் தாக்குதலுக்குக் காரணம்” என்றார்கள்.

மகன் தாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாக சிறைக்குச் சென்றனர், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும், தந்தை குயில்தாசனும்.

அற்புதம்மாளிடம் பேசினோம்.

“என் மகன் 25 வருஷமா சிறையில இருக்கான். அவன் நலமோடு விடுதலையாகி வருவான்னு எதிர்ப்பார்த்து காத்திருக்கும்போது, இப்படியொரு சம்பவம் நடந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்தச் சம்பவத்துக்கு முந்தின நாள்கூட அறிவிடம் அந்தப் பையன் நல்லா பேசியிருக்கான். மறுநாளே தாக்குற அளவுக்குப் போறதுக்கு என்ன காரணம்? இதுல எனக்கு சந்தேகம் இருக்கு. முதல்வர்தான் உரிய நடவடிக்கை எடுக்கணும். கடந்த ஜனவரி மாதம் பரோல் கேட்டு மனு செய்தோம். 9 மாதங்கள் ஆச்சு. விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வந்த இந்த வழக்கில், கைதியை பரோலில் அனுப்ப என்ன தயக்கம் என தெரியவில்லை” என்று கண்கலங்கினார்.

ஒரு தாயின் கண்ணீரால் முதல்வரின் மனம் கரையுமா?


You May Like This Video

- Vikatan

Comments