அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 29 நாட்கள் ஆகிவிட்டன.
முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தாலும், தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுகிறது.
கார்டன் திரும்புவதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில்.
போயஸ் கார்டனில் இருந்து கடந்த 22-ம் தேதி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.
தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டாலும், நுரையீரல் தொற்று உள்பட பலவித சிரமங்களுக்கு ஆளானார்.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் வருகையும் அதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் சிகிச்சையும் முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை அளித்தன.
இந்நிலையில், 'முதல்வர் சில நாட்களில் வீடு திரும்புவார். அதன்பிறகு கார்டனிலேயே சிகிச்சையைத் தொடர்வார்' என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முதல்வர் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேல் சர்க்கரை நோய் பாதிப்பில் இருக்கிறார் முதல்வர்.
நுரையீரலில் நீர்க் கோர்ப்பைச் சரிசெய்வதற்கான சிகிச்சைகள்தான் தொடக்கத்தில் வேகமெடுத்தன.
தற்போது நுரையீரல் தொற்றின் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இன்னமும் வெண்டிலேட்டர் நீக்கப்படவில்லை.
treacheostomy எனப்படும் மூச்சுக் குழாயை தொண்டையில் இருந்து அகற்றப்பட உள்ளது.
சில நேரங்களில் மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறார். நல்ல நினைவோடு சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கிறார் என நம்மிடம் தெரிவித்த கார்டன் ஊழியர் ஒருவர், முகம் மற்றும் இரண்டு கை, கால்களுக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் இயக்கங்களை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வரும் வேலைகளில் பிஸியோதெரபி நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேரத்தில், சிறுநீரகத் தொற்றுக்கும் ஆளானார் முதல்வர். அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
பலவிதமான சிகிச்சை முறைகளால் உடல் மெலிந்துவிட்டார் முதல்வர். படுக்கையில் தொடர்ந்து இருப்பதால், முதுகில் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை நடக்கிறது.
படுக்கையில் இருந்து அவ்வப்போது நிமிர்ந்து உட்காரும் அளவுக்கு அவரை தயார்படுத்திவிட்டனர் மருத்துவர்கள்.
ஆனால், சிகிச்சைக்கான மருந்துகளை மிகவும் தாமதமாகத்தான் அவரது உடல் ஏற்றுக் கொள்கிறது.
எனவே, படிப்படியான முன்னேற்றத்தை நோக்கித்தான் சிகிச்சை முறைகள் செல்கின்றன.
ஜெயலலிதாவின உடல்நிலையில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் தெரிந்தாலும், இன்றைய நிலவரப்படி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது.
அவரது கழுத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் பொருத்தப்பட்ட TRACHEOSTOMY - இன்று (வெள்ளிக்கிழமை) நல்ல நேரத்தில் அகற்றப்படலாம். அதற்கான பணியில் தற்போது மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதை எடுத்தாலே, ஒரளவு பேச ஆரம்பித்து விடுவார். அதோடு ஜெயலலிதா உடல்நிலையின் முழு ரிப்போர்ட் அப்போலோ தரப்பில் இன்று வெளியிடப்படலாம். அல்லது கடைசி நிமிட அறிவுறுத்தல் காரணமாக நிறுத்தப்படலாம்!என்றார் விரிவாக.
இயல்பாகவே, ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் முதல்வர் ஜெயலலிதா. தற்போதுள்ள கிரக சூழல்களின்படி, ' தீபாவளிக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆவது சரியல்ல என சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே, தீபாவளிக்கு முன்பு முதல்வர் வீடு திரும்பும் வாய்ப்பு குறைவு.
தினமும் காலையில், அனைத்து அமைச்சர்களும் அப்போலோவில் அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டுத்தான் கோட்டைக்குச் செல்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் தீவிரக் கண்காணிப்பில் வைத்திருக்கிறார் சசிகலா.
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையும், உளவுத்துறை மூலம் உடனுக்குடன் அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
- Vikatan