சூடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு விவகாரம்! தொடரும் போராட்டம்.. திரும்பிப் பார்க்க திராணியற்ற மத்திய அரசு!

Report Print Nivetha in இந்தியா
500Shares

தமிழ்நாட்டில் திரும்பிய திசையெங்கும் போராட்டங்கள்... தமிழ் இனத்தின் பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டை மீட்பதற்காக 'மத்திய அரசே! மத்திய அரசே! மானங்கெட்ட மத்திய அரசே' எனும் ஆக்ரோஷ முழக்கங்கள்... இத்தகைய எழுச்சிமிக்க தமிழகத்தை கண்டு தொடைநடுங்கிப் போய் கிடக்கிறது திராணியற்ற மத்திய அரசு.

காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன், கெயில், ஷேல் எரிவாயு, நீட் தேர்வு, இடஒதுக்கீடு என தமிழகத்தின் உயிர்மூச்சு விவகாரங்களில் எல்லாம் சடுகுடு விளையாடிப் பார்த்த கும்பல் ஜல்லிக்கட்டிலும் கை வத்தது.

இரண்டு ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு என்பது எங்கோ மதுரையிலும் ராமநாதபுரத்திலும் நடப்பது.

அதென்ன தமிழினத்தின் ஒட்டுமொத்த பண்பாடா? என ஏகடியங்களை பேசியவர்கள் ஏராளம்.. மைக் பிடித்த போதெல்லாம் ஜல்லிக்கட்டு என்பது சித்ரவதை தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என ஏகவசனத்தில் விமர்சித்துள்ளார்கள்.

பண்பாட்டு அடையாளம்

ஆனால் இப்படி ஏளனம் பேசிய கும்பல் கனவிலும் நினைத்துப் பார்க்காத போராட்டங்கள் தமிழ் மண்ணில் வெடித்து கிளம்பியுள்ளன.

ஜல்லிக்கட்டு என்பது அலங்காநல்லூரிலும் அவனியாபுரத்திலும் நடக்கிற ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு அல்ல. அது ஒட்டுமொத்த தமிழினத்தின் பண்பாட்டு அடையாளம்.

சீறிய இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய கும்பல் தமிழினத்தின் நாட்டு மாடுகளையே நாசமாக்க வந்த வேட்டை கும்பல் என அரசியல் கருத்தியலோடு சீறிப் பாய்ந்துவிட்டனர்.

தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள். இந்த எழுச்சியை அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் தடியடி நடத்தி கலைத்துவிடலாம் என நினைத்தவர்கள் தாங்கள் கை வைத்தது தேன்கூட்டில் என்பது தெரியாமல் போனது.

இளங்காளையரின் போர்

அலங்கநால்லூர் மண்ணில் 21 மணிநேரம் இடைவிடாத அமைதிவழிப் போராட்டத்தை கொட்டும் பனியிலும் நடத்தி உறங்கிக் கிடந்த தமிழின இளைஞர்களை வீதிக்கு வரவைத்துவிட்டனர் இளங்காளைகள்.

முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போதும் ஜல்லிக்கட்டு நடத்தாமல் விடுதலையாக மாட்டோம் என முழக்கமிட்டு அந்த இளைஞர் படை நடத்திய உள்ளிருப்பு போராட்டம் தமிழகத்தை உலுக்கிவிட்டது.

விண்ணதிரும் போர் முழக்கங்கள்

இதன் விளைவு இப்போது தமிழ்நாட்டின் தெருவெங்கும் 'எங்கள் பண்பாட்டு உரிமை ஜல்லிக்கட்டு' 'ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த பீட்டாவே வெளியேறு' 'மானங்கெட்ட மத்திய அரசே! எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்' என போர் முழக்கங்கள் விண்ணை அதிர வைக்கின்றன.

இந்த வரலாறு காணாத பேரெழுச்சியை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத இந்திய மத்திய அரசு இப்போது விக்கித்து நிற்கிறது.

திராணியற்ற மத்திய அரசு

'கருப்பு பணத்துக்கு அவசர சட்டம் கொண்டு வரும் உங்களால் எங்களது பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு ஏன் கொண்டுவர முடியாது? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க முடியாத உன்னால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கூடாது என கூற முடியாதா? என்பதுதான் இந்திய மத்திய அரசு முன்பாக தமிழ்த் தேசிய இனம் எழுப்பி நிற்கும் கேள்வி.

தமிழ்நாட்டு மண்ணில் காலூன்றவே முடியாத கோபத்தில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தமிழர் முதுகில் குத்தி பச்சை துரோகம் செய்த மத்திய அரசு இப்போது தமிழர் எழுச்சியை எதிர்கொள்ள திராணியற்று கிடக்கிறது.

திசைமாறும் அபாயம்

ஆனால் தமிழினத்தின் உயிர்நாடி கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து அடிபணிந்தாக வேண்டும் என்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறுவழியே இல்லை.

அப்படி செய்யாது போனால் இப்போராட்டத்தின் திசைவழி என்பது இந்தியப் பேரரசை கிடுகிடுக்க வைக்கும் கோரிக்கைகளை நோக்கி மட்டுமே பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Comments