இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்டெடுங்கள்! மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

Report Print Nivetha in இந்தியா
53Shares

கச்சத்தீவை மீட்க மத்தியரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்று முன்தினம் இரவு இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த 22 வயதான பிரிட்ஜோ என்ற மீனவர் கொல்லப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழக மீனவர் கெல்லப்பட்டது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ம் பிரதமர் மோடியும் இதுவரை வாய்திறக்கவில்லை.

மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

21 வயது நிரம்பிய அந்த இளைஞரின் எதிர்கால கனவுகள் இலங்கை கடற்படையால் சிதைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தங்களின் வாழ்வாதாரத்துக்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி பொருள்களை சேதப்படுவது ஆகியவை தொடர்ந்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது தமிழக மீனவர்கள் இடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மீன் பிடிக்க கடலுக்குள் சென்றால் உயிருடன் திரும்ப முடியாதோ என் பீதியை மீனவர்களிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் என அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த இலங்கை ராணுவம், தற்போது மீனவர்களை சுட்டுக் கொல்வது என முடிவெடுத்துள்ளது. இதனை மத்திய அரசு ஒரு நிமிடம் கூட வேடிக்கை பார்க்கக் கூடாது.

இலங்கை கடற்படையின் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து, மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்க தூதரக ரீதியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான உரிமையை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணவும், மீனவர் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மு.க.ஸ்டாலின் கடிதத்தின் மூலம் கூறியுள்ளார்.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இலங்கை அதிக அக்கறையோடு செயற்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீனவர் கொலை சம்பவம் மீண்டும் நிகழாது என உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தரப்பினர் இவ்விவகாரம் தொடர்பில் செலுத்துகின்ற அக்கறையை மேலும் அதிகரிப்பார்களாயின் இப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வைக் காண அவ்வளவு காலம் எடுக்காது என்பதே அவதானிகளின் கருத்தாக உள்ளது.

ஆகவே இரு நாட்டு மீனவர்களின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு இப்பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இதன் மூலம் இவ்வாறான தேவையற்ற மரணங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

Comments