ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உக்கிர மோதல்! படையினர் உள்ளிட்ட நால்வர் பலி

Report Print Murali Murali in இந்தியா

ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள மாட்ரிபக் சொய்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது தீவிரவாதிகளை படையினர் சுற்றி வளைத்த நிலையில், படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர்.

மேலும் ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜம்மு-காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டதையடுத்து, படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சரணடையுமாறு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தீவிரவாதிகள் சரணடைய மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, இராணுவத்தினர் பதில் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.