இலங்கையில் மோதிக்கொள்ளும் இந்தியா-சீனா! இலங்கைக்கு லாபம்!

Report Print Samy in இந்தியா

இப்போது, இந்தியா-சீனா நடுவே இலங்கையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள ஒரு விமான நிலையத்தைக் கைப்பற்றுவதில் இரு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

தெற்காசியாவில் தனது ஆளுமை தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது சீனா. ஆனால் அந்த நாட்டை இந்த பிராந்தியத்தில் எதிர்க்கும் ஒரே நாடு இந்தியாவாக உள்ளது.

எனவே உடனடியாக இந்தியாவை சுற்றிலும் உள்ள நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கிட்டத்தட்ட இந்தியாவை முற்றுகையிடும் முடிவோடு உள்ளது சீனா.

இதன் ஒருபகுதியாகத்தான், பாகிஸ்தான்-சீனா நடுவே சாலை அமைக்கப்படுகிறது. மியான்மர் எல்லையில், டோக்லாமில் சாலை அமைக்கிறது சீனா.

இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்களில் தங்களது கப்பல்களையும், விமானங்களையும் நிலைநிறுத்த முற்படுகிறது சீனா.

இதையறிந்துள்ள இந்தியா, இனிமேலும் அமைதியாக இருப்பது அண்டை நாடுகளுக்கு இந்தியா மீதான மரியாதையை குறைத்துவிடும் என்பதை உணர்ந்துள்ளது.

டோக்லாமில் மியான்மருக்கு ஆதரவாக இந்தியா தனது படைகளை நிறுத்தி சீனாவை நகரவிடாமல் செய்ததன் பின்னணி இதுதான். இதனால் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு இந்தியா மீதான மதிப்பு கூடியுள்ளது.

சீனாவுக்கு அஞ்சி நாம் நடக்க வேண்டியதில்லை, இந்தியா நமக்கு உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணம் அண்டை நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. சீன ஆதிக்கத்தை ஒடுக்க இந்தியாவுக்கும் இதுதான் தேவை.

இலங்கையும், முதலில் சீனாவுக்கு மிகவும் நேசக்கரம் நீட்டியது. ஆனால் டோக்லாமில் இந்தியா காட்டிய நிலைப்பாட்டை பார்த்த பிறகு இந்தியாவையும் குளிர்விக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கி விட்டது.

அதன் ஒருபகுதியாகத்தான், தனது நீர்மூழ்கி கப்பலை நிலைநிறுத்திக்கொள்ள சீனா கேட்ட அனுமதியை இலங்கை மறுத்து விட்டது.

இதனிடையே, கொழும்பிலிருந்து 250 கி.மீ தொலைவில் அம்பந்தோட்டை என்ற இடத்தில் சில வருடங்கள் முன்பு, மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் ஒன்றை சீன உதவியோடு 190 மில்லியன் டொலர் மதிப்பில் இலங்கை அமைத்தது.

மொத்த செலவில் 90 விழுக்காடுக்கும் மேல் சீனாவிலிருந்து வந்தது. ஆனால் இதற்கு ஏற்பட்ட கடனை சீனாவின் எக்சிம் வங்கிக்கு திருப்பி செலுத்த முடியாமல் இலங்கை திணறி வருகிறது.

இதையறிந்த இந்தியா, அந்த விமான நிலையத்தை வாங்கிக்கொள்ள முன்வந்துள்ளது.

தனது பயன்பாட்டுக்காக இந்த விமான நிலையத்தை பயன்படுத்தலாம், இதன் மூலம், இலங்கையின் தெற்கு முனை வரை நமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இந்திய பெருங்கடலிலும் இந்தியாவை நெருக்கலாம் என்ற சீனாவின் திட்டம் இதன் மூலம் கனவாகிப் போயுள்ளது.

6.3 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் இலங்கை சீனாவிடமிருந்து கடன் பெற்றுள்ளது. இதனால் அதை திருப்பச் செலுத்த முடியாமல் இலங்கை தடுமாறுகிறது.

இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் டாலர். இதில் சீனாவிடமிருந்து அது பெற்றுள்ள கடன் மட்டும் 8 பில்லியன் டாலர்.

இலங்கை பொருளாதாரம் தற்போது மந்தநிலையில் உள்ளதால் கடனை கடட முடியாமல் விமான நிலையத்தை விற்பனை செய்து விட இலங்கை திட்டமிட்டுள்ளது. அதை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள உள்ளது.

இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு 1 சதவீதம் என்ற அளவில் கடன் வழங்கிவருகிறது. உலக வங்கியும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது.

ஆனால் சீனா இவ்வாறு அதிகமாக வட்டிவிதித்து லாபம் பார்க்கிறது. எனவே சீனா தங்களை கடனை திருப்பிச் செலுத்த சொல்லி தொல்லை கொடுக்காமல் இருக்க இந்தியாவிடம் இந்த விமான நிலையத்தை அளிக்கலாம் என இலங்கை திட்டமிடுகிறது.

இந்தியாவின் இந்த செயல்பாடு குறித்து தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே இலங்கை விமான நிலையத்தை முன்வைத்து இந்தியாவும்-சீனாவும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

ஒருவேளை இதில் இந்தியா முந்திக்கொண்டால் இந்தியாவுக்கு லாபம். இருவரும் மோதிக்கொண்டால் இலங்கைக்கு தான் லாபம்.