நித்தியானந்தா கைது செய்யப்படுவார்? - உல்லாச வழக்கில் அதிரடித் திருப்பம்!

Report Print Samy in இந்தியா

நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா இருக்கும் படுக்கையறை காட்சிகள் உண்மையானதுதான், மார்பிங் செய்யப்படவில்லை என்று டெல்லி தடயவியல் ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு நித்யானந்தா உல்லாச வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

நித்யானந்தா பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் 2010-ம் ஆண்டு வெளியாகின.

நித்யானந்தா கார் டிரைவர் லெனின் கருப்பன் மூலம் அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நித்யானந்தாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதுடன் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், நித்யானந்தாவைக் கர்நாடகா போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நித்யானந்தா, ''அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை; அந்த வீடியோ போலியானது. தனக்கு ஆண்மைத்தன்மையே இல்லை' என்று வாதாடினார். லெனின் கருப்பனுக்கு எதிராகப் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரஞ்சிதாவும், ''அந்தப் படுக்கையறை காட்சி வீடியோ பொய்யானது. திட்டமிட்டு மார்பிங் செய்து அந்த வீடியோவைத் தயாரித்துள்ளனர்' என்று வாதாடினார்.

இதையடுத்து, பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம், வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கர்நாடக போலீஸாருக்கு உத்தரவிட்டது.

அந்த வீடியோவை ஆய்வுசெய்த ஐதராபாத் தடயவியல் ஆய்வு மையம், ''நித்யானந்தா - ரஞ்சிதா படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் உண்மையானதுதான். மார்பிங் செய்யப்படவில்லை'' என்று தெரிவித்தது.

மேலும், நித்யானந்தாவின் குரலும் ஆய்வு செய்யப்பட்டது. இதை ஆய்வு செய்த பெங்களூரு மையமும், ''வீடியோவில் இருப்பது நித்தியானந்தா குரல்தான்'' என்று உறுதி செய்தது அறிக்கை சமர்ப்பித்தது.

இதனால், இந்த வழக்கில் அதிரடித் திருப்பம் ஏற்பட்டது.

ஆனால், இந்த ஆய்வு அறிக்கை முடிவுகளை நித்யானந்தா தரப்பு கடுமையாக மறுத்தது. நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தனர்.

அந்த நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 'நித்யானந்தா -ரஞ்சிதா' வீடியோவை மீண்டும் ஆய்வு செய்த டெல்லி தடயவியல் ஆய்வு மையம், ''சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தா - ரஞ்சிதாதான். அது டூப்ளிகேட் அல்ல'' என்று உறுதி செய்தது.

இந்த அறிக்கையைப் பெங்களூரு மாநகர கூடுதல் காவல் ஆணையர் சரண் ரெட்டி நவம்பர் 22-ம் தேதி ராம்நகரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகத் தகவல் வெளியானது.

இதையறிந்து, அந்த வீடியோ பிரச்னையை முன்வைத்து கன்னட அமைப்பினர், நேற்று பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமம் அருகே கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆசிரமத்தின் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டு இருந்த பேனர்களைக் கிழித்து எறிந்தனர். இரும்புக் கதவின் மீது ஏறியும் கண்டனக் கோஷம் போட்டனர்.

பெங்களூருவை விட்டு வெளியேறு என்று நித்யானந்தாவுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்களைப் போலீஸார் தடுத்தனர்.

தற்போது, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சி.ஐ.டி-க்குத் தடயவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், உல்லாச வழக்கு மீண்டும் உயிர் பெற்று உள்ளது.

தடயவியல் அறிக்கை, உண்மைத் தன்மையை உறுதி செய்துள்ளதால் நித்யானந்தாவுக்குச் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

எனவே, நித்யானந்தா கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

- Vikatan