துணை முதல்வர் பதவிக்கு வந்த பின்னர் ஓ.பி.எஸ் வாங்கி குவித்த சொத்துக்கள்!

Report Print Murali Murali in இந்தியா

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பதவிக்கு வந்த பிறகு பல கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் புகார் செய்துள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் சார்பில், நேற்று புகார் அளித்தனர்.

இந்த புகார் குறித்து நிருபர்களிடம், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது, 2006 முதல் தற்போது வரை தேனி மாவட்டத்தில் மொத்தம் 106.5 ஏக்கர் விவசாய நிலங்கள் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினர் பெயரில் உள்ளன.

அதில், ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி பெயரில் 25 ஏக்கர், மகன் ரவீந்திரநாத் குமார் பெயரில் 31.3 ஏக்கர், மகனின் ஜெயம் விஜயம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் பெயரில் 27.6 ஏக்கர் நிலம், மற்றொரு மகன் ஜெயப்ரதீப் பெயரில் 22.6 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர்.

இவற்றில் பெரும்பாலானவை 2011ல் வாங்கப்பட்டுள்ளன. ரவீந்திரநாத், ஜெயப்ரதீப் இருவரும் நான்கு நிறுவனங்களில் பங்குதாரர்களாகவும், இயக்குநர்களாகவும் உள்ளனர்.

இந்த நிறுவனங்கள் எந்த அடிப்படையில் அவர்களை இயக்குநர்களாக தேர்ந்தெடுத்தன என்பது கேள்வி எழுகிறது. இவற்றில் ஒன்றான எக்ஸலண்ட் மரைன் லைன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 2015ல் தொடங்கப்படுகிறது.

வெறும் ரூ.5 லட்சம் பங்கு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஒரே ஆண்டில் ரூ.30 கோடி வருவாய் காட்டியுள்ளது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு, ஓபிஎஸ் மகன்கள் இருவரும் பங்குதாரர்களாக சேர்ந்துள்ளனர்.

நிறுவனத்தின் 33 சதவீதம் பங்குகளை இவர்கள் வைத்துள்ளனர். ரூ.30 கோடி வருவாய் கொண்ட நிறுவனம், இப்படி இவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டது பினாமி பரிமாற்றத்தின் ஒரு அறிகுறியாகும்.

ஒரு வருடத்தில் எப்படி ரூ.30 கோடி வருவாய் காட்டியுள்ளது என்பதை விசாரிக்க வேண்டும். வாணி பேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஓபிஎஸ் மகன்கள் இருவரும் மொத்த பங்குகளான 90 ஆயிரத்தில் 30 ஆயிரம் பங்குகளை வைத்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.10 கோடி. அதில் ஓபிஎஸ் மகன்கள் ரூ.30 லட்சம் முதலீடாகவும், மற்ற இரு பங்குதாரர்களான ஹரிச்சந்திரன் மற்றும் ஞானசேகரன் ரூ.2.05 கோடி முதலீடு செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஓபிஎஸ் பினாமி வேலைக்கு உதவியதாக சொல்லப்படுகிறது. எனவே, இவர்களின் வருமானம் மற்றும் இவர்களின் மற்ற நிறுவனங்களின் வருமானமும் விசாரிக்கப்பட வேண்டும்.

ஓபிஎஸ் மார்ச் 2015ல் முதல்வராக இருந்தபோது, ஒரு அரசாணை (அரசாணை எண்45) வெளியிடுகிறார். இந்த அரசாணை நூல் விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு கட்ட வேண்டிய வரியில் இருந்து விலக்கு அளிக்கிறது.

இந்த வரி விலக்கு மில் தொழிலில் இருக்கும் தம் மகன்களுக்கு உதவி செய்யவே என்று கூறப்படுகிறது. மேலும் ஆங்கில பத்திரிகையின் புலனாய்வின்படி ஓபிஎஸ் மகன்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.57 கோடி.

இந்தப் புகார்களை முகாந்திரமாக கொண்டு, ஓ.பன்னீர்செல்வம் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜெயராம் வெங்கடேசன் கூறினார். சொத்து தொடர்பான ஆவணங்களையும் அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்டனர். கவர்னரிடம் முறையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

- Dina Karan