சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியவர் மீது என்ன நடவடிக்கை? டிஐஜி ரூபா கேள்வி

Report Print Samy in இந்தியா
160Shares

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதாக ஊழல் தடுப்பு பிரிவிடம் கொடுத்த புகாரின் நிலை பற்றி டி.ஐ.ஜி ரூபா ஐ.பி.எஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் வெளியில் கடைக்கு சென்று விட்டு, கையில் பையுடன் சிறைக்கு திரும்பும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைக் கண்டுபிடித்த சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா ஐ.பி.எஸ் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

சிறையில் நடந்து வரும் விதி மீறல்களுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாகவும் டி.ஜி.பி.க்கு ரூ.2 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டதாகவும், குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்த புகாரை கடந்த ஆகஸ்ட் கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவிடம் அளித்திருந்தார் ரூபா.

இதுபற்றி முழுமையான தகவல்களுக்கு கர்நாடக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு ஏதுவாக டி.ஐ.ஜி. ரூபா இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விசாரணையின் நிலை குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்.டி.ஐ மூலம் ரூபா ஐ.பி.எஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.