ஜெயலலிதா மரணம்! சசிகலாவிற்கு விசாரணை ஆணைக்குழு கொடுத்த உத்தரவு

Report Print Murali Murali in இந்தியா
255Shares

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பிலான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி ஜெயலலிதாவின் தோழி சசிக்கலாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஆணையம் இந்த உத்தரவை வழங்கியிருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாக டிசம்பர் மாதம் 5ஆம் திகதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

சுமார் 75 நாட்கள் வரையில் வைத்தியசாலையில் தங்கியிருந்த ஜெயலலிதா குறித்து புகைப்படங்களோ, காணொளிகளோ அப்போது வெளியாகியிருக்கவில்லை. அவ்வப்போது வைத்தியசாலையின் அறிக்கைகள் மட்டுமே வெளிவந்தன.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், மரணம் தொடர்பில் நீதிவிசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு ஏற்படுத்தப்பட்டு விசாரணைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ஜெயலலிதாவின் உறவினர்கள், வைத்தியர்கள், பணியாளர்கள், அரசியல் வாதிகள் என பலரும் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

இவ்வாறான பின்னணியிலே, கடந்த 20ஆம் திகதி அப்பலோ வைத்தியசாலையில், ஜெயலலிதாக சிகிச்சை பெற்றுக்கொண்ட போது எடுத்ததாக கூறப்படும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது காணொளியை வெளியிட்டது தவறு என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களையும், அதற்கான ஆதாரங்கள் இருந்தால் விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சசிகலா 15 நாட்களில் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை தர வேண்டும் எனவும், அப்போலோ வைத்தியசாலையின் தலைவர் பிரதாப்ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி ஆகியோர் 10 நாட்களில் ஆவணங்களை தர வேண்டும் எனவும் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

விசாரணை ஆணைக்குழுவின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.