ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது!

Report Print Murali Murali in இந்தியா

ரஜினியை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார். பாஜக ரஜினியை பயன்படுத்துகிறதோ என்ற அச்சம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறவர் இயக்குனர் அமீர். ரஜினி பாஜகவை தொடர்ந்து பாராட்டி வருகிறவர் அவர் பாஜகவின் முகமாகத் தான் இருப்பார் என்றும் அமீர் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை வரவேற்று முதலில் டுவீட் போட்டவர் ரஜினி தான். தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் வந்த போது அது குறித்து கருத்து தெரிவிக்காமல் பாஜகவின் திட்டங்களை மட்டும் பாராட்டியது ஏன் என்றும் அமீர் கேள்வி எழுப்பி வருகிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய இந்தியா பிறக்கப்போகிறது வாழ்த்துகள் என்று ரஜினி குறிப்பிட்டதற்கும் அமீர் கண்டனம் தெரிவித்தார்.

ஆன்மிக அரசியலும் ரஜினியும்

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிவிட்ட நிலையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ,அவர் கூறியதாவது,

மத, இன, பேதமற்ற ஆன்மிக அரசியல் என்று ரஜினி தெளிவாக தனது ஆன்மிக அரசியலைப் பற்றி சொல்லிவிட்டார். இதற்குப் பிறகு தனது கொள்கையைப் பற்றி ரஜினி என்ன வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் அமீர், இதையெல்லாம் சொல்லிவிட்டு அவர் ஏன் அடுத்த நாள் ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றார் என்பதில் தான் கேள்வி எழுகிறது.

ரஜினியை பாஜக பயன்படுத்துகிறது

ஏற்கனவே தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக ரஜினியை பயன்படுத்துகிறதோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. அர்ஜுன் சம்பத் போன்றோர்கள் ஏற்கனவே காவிச்சூரியன் இங்கு மலரும் என்று சொன்னதால் அந்த அச்சம் இருக்கிறது.

ரஜினிக்கு ஆதரவு ஏன்?

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகச் சொன்னதும் ஹரிஹரசர்மா, தமிழிசை போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொன்னதும் தமிழிசை, எச்.ராஜா மற்றும் குருமூர்த்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிப்பதால் பாஜகவின் பின்னோட்டம் இருக்கிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

ரஜினியை தேர்ந்தெடுத்தால்

மக்கள் நாளை ஆட்சிக்கு ரஜினியை தேர்ந்தெடுத்துவிட்டால்? அவருடைய வார்த்தையே தான் நான் திருப்பி சொல்கிறேன், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் என்று தொடர்ந்து தமிழ்ச்சமூகம் பற்றி பேசி வரும் அமீர் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- One India