ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு!

Report Print Samy in இந்தியா

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரிடம் விசாரணை முடிவடைந்த பிறகு, குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்ற சசிகலா தரப்பு கோரிக்கையை விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அவர் சிறையில் இருப்பதால் அவர் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

அப்போது, விசாரணை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியலை விசாரணை ஆணையம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், விசாரணை முடிந்ததும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், சசிகலா தரப்பு கோரிக்கையை விசாரணை ஆணைய தலைவரான நீதிபதி ஆறுமுகசாமி நிராகரித்துள்ளார்.

அனைவரிடமும் விசாரித்த பிறகு கடைசியில் குறுக்கு விசாரணை நடத்தினால் வழக்கு முடிவதற்கு 15 ஆண்டுகள் ஆகும் என்றும், இனி வரும் நாட்களில் ஆணையத்திற்கு வருவோரிடம் வேண்டுமானால் குறுக்கு விசாரணை செய்துகொள்ளலாம் எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்.

வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மனு மீது ஜனவரி 22-ல் மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

- Maalai Malar