டிசம்பர் 4ம் திகதியே ஜெயலலிதா உயிரிழந்து விட்டார்!- திவாகரன் அதிர்ச்சி தகவல்

Report Print Samy in இந்தியா

அப்பல்லோவில் உடல்நலக்குறைவினால் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலை 5.15 மணிக்கே உயிரிழந்து விட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 4ஆம் தேதியன்று இதய முடக்கம் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டது. இதனையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதே மிகப்பெரிய அதிர்ச்சி தொண்டர்களிடையே ஏற்பட்டது.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா உடல் நலம் தேறி வந்தார். டிசம்பர் 5 ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு அவர் மரணமடைந்ததாக அப்பல்லோ நிர்வாகம் செய்தி வெளியிட்டது.

6ஆம் தேதியன்று பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி மாலையே அவர் உயிரிழந்து விட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் மரணத்தை தாமதமாக தெரிவித்தாக கூறியுள்ளார் திவாகரன்.

அப்போதே ஏன் இப்படி இறந்தவரை மெஷின் பாதுகாப்பில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தமிழகம் முழுவதும் இருக்கும் அப்பலோ மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே மரணத்தை அறிவிக்க முடியும் என்று அப்பலோ கூறியதாக திவாகரன் பேசியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே ஆபத்தான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மக்கள் பீதியடைந்து விடுவார்கள் என்பதால் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூற அறிவுறுத்தப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த மாதத்தில் கூறி இருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தை அறிவிக்காமல் வைத்திருந்தது அப்பலோ தான் என்று தெரிவித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஒரு வேளை ஜெயலலிதா முன்கூட்டியே இறந்திருந்தால் 24 மணி நேரம் அவகாசம் எடுத்துக் கொண்டது ஏன், இதற்கான அனுமதி சசிகலாவிற்கு தெரியாமல் தரப்பட்டிருக்கும் என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

திவாகரன் சொல்வது உண்மையா?

ஆனால் மருத்துவ ரீதியில் இதனை பார்க்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இதய செயல்பாடு நின்றாலும், அதனை மீண்டும் துடிக்கச் செய்யத் தான் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

டிசம்பர் 4ம் தேதியே இதய துடிப்பு நின்றாலும், அதனை மீண்டும் துடிக்கச் செய்யும் வரை மூளையின் செயல்பாடு எந்த அளவில் இருந்தது என்பதற்கான மருத்துவ ஆதாரத்தை பார்க்க வேண்டும்.

அதைப் பார்த்தால் மட்டுமே திவாகரன் கூறுவதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவத் துறையினர்.

இன்னும் என்னென்ன அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகப் போகிறதோ தெரியலையே.