ராஜிவ் கொலை வழக்கு கைதிக்கு அச்சுறுத்தல்!

Report Print Samy in இந்தியா

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தண்டனை கைதி ரவிச்சந்திரனுக்கு அச்சுறுத்தல் உள்ளதால், பரோலில் வெளியே செல்ல அனுமதித்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பரோல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ல் ஸ்ரீபெரும்புதுாரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில் உள்ளேன்.

எனக்கு பரோல் கோரி சிறைத்துறை மதுரை டி.ஐ.ஜி.,க்கு மனு அனுப்பினோம். அவர், 'வயர்லெஸ் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் சட்டம். பரோல் அனுமதிப்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்' என ஜூலை 22 ல் நிராகரித்தார்.

பாஸ்போர்ட், வயர்லெஸ் சட்டப்படி எனக்கு தண்டனை வழங்கவில்லை. கூட்டுச் சதி மற்றும் கொலைக் குற்ற பிரிவுகளின் கீழ்தான் தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய பேரறிவாளனுக்கு தமிழக அரசு இரண்டு மாதங்கள் பரோல் அனுமதித்தது. அதுபோல் எனக்கும் பரோல் அனுமதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

நான் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். குடும்ப சொத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. பரோல் அனுமதிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஒரு மாதம் சாதாரண பரோல் அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரவிச்சந்திரன் மனு செய்திருந்தார்.

ரவிச்சந்திரன் மனுவுக்கு, மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., கனகராஜ் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மனுதாரருக்கு இதே காரணத்திற்காக 2012 ல் 15 நாட்கள் பரோல் அனுமதிக்கப்பட்டது. மனுதாரரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் பரோலில் வீட்டிற்கு வரும்போது சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

அருப்புக்கோட்டையிலிருந்து 50 கி.மீ., ல் துாத்துக்குடி மாவட்டத்தில் மனுதாரர் குடும்பச் சொத்து உள்ளது. அங்கு பார்வையிடச் செல்ல மனுதாரர் விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், இரு மாவட்ட போலீசார் பாதுகாப்பு அளிக்க இயலாது. இதனால் மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தண்டனைக் கைதிகள் 'பவர் ஆப் அட்டார்னி' மூலம் சிறையில் கண்காணிப்பாளர் முன்னிலையில் சொத்துக்களை பதிவு செய்ய வழிவகை உள்ளது. இதற்காக பரோல் அனுமதிக்கத் தேவையில்லை.

மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் முடிவை எதிர்த்து தாக்கலான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பேரறிவாளனுக்கு பரோல் அனுமதித்தால் பிரச்சினை ஏற்படாது' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு அரசு பரோல் அனுமதித்தது.

அதுபோல் நளினியும் தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டுள்ளார். எனினும் கிடைக்கவில்லை.

எனவே அவற்றை மனுதாரரின் விவகாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த மனுவை நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்தது. இதனையடுத்து விசாரணையை பெப்ரவரி 20ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

- Dina Malar