இந்தியா தனக்குத்தானே வெட்டிய குழி!

Report Print Hariharan in இந்தியா
1148Shares

மத்தள விமான நிலையத்தின் மீது சில உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை விமானப்படையின் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டிருக்கிறது.

அவசர தேவைகளின் போதும் தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்காகவும் மத்தள விமான நிலையத்தின் ஓடுபாதையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பது விமானப்படை விடுத்துள்ள முதலாவது கோரிக்கை.

தேவைப்பட்டால் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கென விமான நிலையத்தில் ஒரு பகுதி நிலத்தை தமக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்பது விமானப்படை முன்வைத்துள்ள இரண்டாவது கோரிக்கை.

தேசிய பாதுகாப்பு நலன்களைக் காரணம் காட்டியே விமானப்படை இந்தக் கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார் சிவில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நிமலசிறி.

மத்தள விமான நிலையத்தை இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுக்களில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் விமானப்படையின் தரப்பில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மத்தள விமான நிலையத்தை அமைக்கத் திட்டமிட்ட போது அதற்கென 2000 ஏக்கர் நிலம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டது. எனினும் முதற்கட்டமாக 800 ஏக்கர் நிலப்பரப்பில் தான் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் அதனை விரிவு படுத்தும் திட்டத்துட்ன் 1200 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

மத்தள விமான நிலையம் பயணிகளோ விமானங்களோ வருகையின்றி தூங்கிக் கிடக்கும் நிலையில் இதனை எப்படியாவது யாருடைய தலையிலாவது கட்டிவிட வேண்டும் என்பது தான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அம்பாந்தோட்டையில் நடைமுறைப்படுத்தப்பட்ட வெள்ளை யானைத் திட்டங்கள் என்று கூறப்பட்ட இரண்டில் ஒன்று தான் மத்தள விமான நிலையம். அடுத்தது அம்பாந்தோட்டை மாகும்பர துறைமுகம்.

நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கொழும்புத் துறைமுகத்தின் வருவாயைத் தின்று கொண்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு வழியாக சீனாவின் தலையில் கட்டி விட்டது அரசாங்கம்.

99 வருட குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டு விட்ட நிலையில் மத்தள விமான நிலையத்தையும் எப்படியாவது இந்தியாவின் தலையில் கட்டிவிட வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டமாக இருக்கிறது.

இந்தியாவுடன் இது தொடர்பாக அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. விரைவில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று கூறப்பட்டாலும் பேச்சுக்களில் இழுபறிகள் காணப்படுகின்றன.

30 வீத பங்குகளை இலங்கை வைத்துக் கொண்டு தம்மிடம் 70 வீத பங்குகளைத் தந்துவிட வேண்டும் என்பது இந்தியாவின் முதலாவது நிபந்தனை. அத்துடன் முதற்கட்டமாக 40 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை செயற்படுத்தலாம் என்றும் பின்னர் அதனை நீடிப்பது குறித்து ஆராயலாம் என்றும் இந்தியா கூறுகிறது.

எனினும் இந்தியாவுக்கு 70 வீத பங்குகளை விட்டுக் கொடுக்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. தமக்கு இன்னும் அதிக பங்கு தேவைப்படுவதாக பேரம் பேசுகிறது. அதைவிட மத்தள விமான நிலையத்தை பாதுகாப்புத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதும் அரசாங்கத்தின் முக்கியமான நிபந்தனையாக இருக்கிறது.

சிவில் விமான போக்குவரத்து தவிர்ந்த வேறெந்த நடவடிக்கைகளுக்கும் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்தக் கூடாது. விமான நிலையத்தை செயற்படுத்தும் பணிகளை மாத்திரம் இந்தியா கையாள வேண்டும் என்றெல்லாம் இலங்கை நிபந்தனை விதித்திருந்தது.

அத்துடன் விமான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரம் இலங்கையின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையிடமே இருக்கும் என்றும் கூறியது. இந்த நிபந்தனைகள் இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் இழுபறிகள் காணப்பட்டு வரும் நிலையிலேயே விமானப்படையும் வேறு புதிய பிரச்சினையைக் கிளப்பி விட்டிருக்கிறது.

அவசர தேவைகள், தேசிய பாதுகாப்புக் காரணங்களின் போது ஓடுபாதையைப் பயன்படுத்தும் உரிமையும் அவசர தேவைகளுக்காக விமான நிலையத்தின் ஒரு பகுதி நிலத்தை தமக்கு வழங்க வேண்டும் என்றும் விமானப்படை கோரியிருக்கிறது.

இவ்வாறு விமானப்படை கோரியிருக்கின்ற நிலப்பரப்பு 90 ஏக்கராகும். விமானப்படையின் இந்தக் கோரிக்கைகள் நியாயமானதே என்றும் இதனால் இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக விமான நிலையத்தை இயக்கும் திட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் கூறியிருக்கிறார்.

இது பிரச்சினையா இல்லையா என்பதை கூற வேண்டியது இந்தியா தான். ஏனென்றால் இந்தியாவுடன் தான் உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது.

அதைவிட ஏற்கனவே மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக இலங்கை முன்வைத்த நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், விமானப்படையும் புகுந்து கொள்வதை இந்தியா விரும்பும் என்பது சந்தேகம்.

இதே பிரச்சினை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் போதும் எழுந்திருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை நீண்ட காலத்துக்கு சீனாவுக்கு வழங்கும் போது அதனை தனது இராணுவத் தேவைகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்ளும் என்ற சந்தேகங்கள் எழுந்திருந்தன.

அதனால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதை இந்தியா இராஜதந்திர வழிமுறைகளில் எதிர்த்து வந்தது. எனினும் இலங்கையின் கடன் நெருக்கடியை சமாளிக்க வேறு வழியில்லை என்று உணர்ந்து கொண்ட இந்தியா அதற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையை முக்கியமாக விதித்தது. அதற்கான எழுத்துமூல உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தது.

அடுத்து துறைமுகத்தின் பாதுகாப்பு முழுவதும் இலங்கைக் கடற்படையின் பொறுப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் அதற்காக துறைமுகத்துக்குள் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் இந்தியா வலியுறுத்தியது.

அந்த இரண்டு கோரிக்கைகளையும் இலங்கை ஏற்றுக்கொண்டு சீனாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பயன்படுத்துவதற்கு இந்தியா முன்வைத்த நிபந்தனைகள் இப்போது இந்தியாவுக்கே ஆபத்தாக மாறியிருக்கிறது.

மத்தள விமான நிலையத்தை இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைகின்ற நிலையில் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டை அங்கு உறுதிப்படுத்துவதில் இலங்கை கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

மத்தள விமான நிலைரயம் திறந்து வைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையில் இதுவரை அங்கு தமக்கான ஓடுபாதை மற்றும் அவசர தேவைக்கான பயன்பாட்டுக்கான நிலம் எதையும் விமானப்படை கோரவில்லை. அதனை இந்தியா நீண்ட காலக் குத்தகைக்கு பெறப்போகிறது என்றவுடன் தான் விமானப்படையும் தனது உரித்தை அங்கு நிலைநாட்ட முனைகிறது.

பொதுவாக எந்தவொரு நாடும் தமது தளங்களை பிற நாடுகளுக்கு வழங்கும் போது அவசர தேவைகளுக்காக பயன்படுத்தும் உரிமையை விட்டுக் கொடுப்பதில்லை. அதனை தமது கைக்குள் வைத்துக் கொண்டே அனுமதி அளிக்கும்.

அந்தவகையில் அவசர மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்காக மத்தள விமான நிலையத்தின் ஓடுபாதையைப் பயன்படுத்துவதற்கான உரித்தையும் விமான நிலையத்தின் பெரியதொரு நிலப்பரப்பையும் விமானப்படை கோரியிருப்பது ஆச்சரியமான விடயமல்ல.

ஆனால் இது இந்தியாவுக்கு அதிர்ச்சி தரக் கூடியதாக இருக்கலாம். ஏனென்றால் ஆம்பாந்தோட்டையில் இந்தியா காலடி எடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ளதற்கு அடிப்படைக் காரணமே சீனாவைக் கண்காணிப்பது தான்.

மத்தள விமான நிலையத்தை இந்தியா தேடிச் சென்று குத்தகைக்குப் பெற்றுக் கொள்வதற்கு அது ஒன்றும் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டிக் கொடுக்கக் கூடியது அல்ல. போடும் முதலீடுகளையே தின்று தீர்த்து விடக் கூடியது அது.

அதனைத் தெரிந்து கொண்டும் இந்தியா முதலீடு செய்ய விரும்புகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது பாதுகாப்பு மூலோபாய நலன்கள் தான். அப்படியிருக்கும் போது அத்தகைய பாதுகாப்பு மூலோபாய நலன்களை அடைய முடியாதவாறு இலங்கை கதவை அடைக்க முயன்றால் இந்தியா மத்தளவின் மீது முதலீடு செய்வதற்கு நிச்சயம் தயங்கும்.

ஏனென்றால் வெறுமனே பெயருக்கு மத்தளவில் போய் நிதியைக் கொட்டிக் கொண்டிருப்பது முட்டாள்தனம் என்பதை இந்தியா அறியும். தனக்கான பாதுகாப்பு மூலோபாய நலன்கள் இல்லாத ஓர் இடத்தில் முகபிபெரிய முதலீடுகளை இந்தியா செய்ய முன்வராது.

இந்தியாவின் பாதுகாப்பு மூலோபாய நலன்களுக்கான ஓட்டைகளை அடைத்து விட்டு மத்தள விமான நிலையத்தை அதன் தலையில் கட்டிவிட இலங்கை அரசாங்கம் நினைத்தால் அது சாத்தியமற்றதாகவே இருக்கும்.