மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in இந்தியா

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கு முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாறாக காமராஜர் நினைவகத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் தர தயார் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி இன்று மாலை காலமானார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திமுக எம்பி கனிமொழி, துரைமுருகன், ஐ பெரியசாமி, முரசொலி செல்வம், ஆ ராசா உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பிற்பகல் நேரில் சந்தித்தனர்.

அப்போது சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் வலியுறுத்தினர்.

இதனை கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காமராஜர் நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் நினைவிடத்திற்கு அருகே 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.