சூரிய அஸ்த்தமனத்திற்கு முன் கருணாநிதியின் அன்றைய ஒரு நாள்! மெய் சிலிர்க்க வைக்கும் தருணங்கள்

Report Print Jeslin Jeslin in இந்தியா

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி சுறுசுறுப்புக்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் அவரது ஒரு நாள், அதாவது காலை முதல் இரவு வரையான 24 மணித்தியாலங்கள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் அறிந்தோர் குறைவு.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதியின் உயிர் இன்று பிரிந்தது. திமுக தொண்டர்களுக்கு அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

கலைஞர் கருணாநிதிக்கு 95 வயது ஆனாலும் ஒரு நாளும் அவர் சோர்ந்து இருந்ததே இல்லையாம். இதனாலேயே அவரை சுறுசுறுப்பின் மறுபெயர் கருணாநிதி என அழைப்பவர்களும் உண்டு. தமது வாழ்நாள் முழுவதும் இந்த பழக்க வழக்கங்களை கடைபிடித்து வந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் பொழுது அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் தொடங்கி விடும். அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து விடும் அவர், பல் துலக்கி விட்டு சூடாக ஒரு தேநீர் அருந்துவார். சூரிய உதயத்துக்கு முன் எழுந்திருப்பவர்களுக்கு, ஒரு நாள் இரண்டு நாட்களுக்கு சமம் என்பார் கருணாநிதி.

முரசொலி முதல் நமது எம்.ஜி.ஆர். வரை தி இந்து முதல் இபிடபில்யூ வரை எல்லாப் பத்திரிகைகளிலும், ஒரு ஆழ்ந்த வாசிப்பு. கட்சியினர், அதிகாரிகள், தொடர்பான விமர்சனங்கள், குறைகள், வெளியாகியிருந்தால் கையோடு அழைத்து விளக்கம் கேட்பார். காலையில் கருணாநிதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது என்றால், அவர்கள் சம்பந்தமாகப் பத்திரிக்கையில் ஏதோ செய்தி வந்திருக்கிறது, அர்ச்சனை நிச்சயம் என்பது தீர்க்கமான சமிக்ஞை.

இவற்றை எல்லாம் முடித்து விட்டு, தினமும் நடை பயிற்சி செய்ய தவறியதில்லை அவர். ஏதாவது மழை நாளாக இருந்தால், வீட்டிலேயே யோகாசனம் செய்வார். குளியலுக்கு பின் காலை உணவு. பெரும்பாலும் இரண்டு இட்லி. தக்காளிச் சட்னி பிடித்தமான சைடிஷ். இதையடுத்து காலை படித்த செய்திகளுக்கான பதில் அறிக்கை. கூடவே உடன்பிறப்புகளுக்கு கடிதமும்.

வாசிப்பு, எழுத்து, சாப்பாடு என பெரும்பாலும் காலைப் பொழுதுகள் எல்லாமே அவரது சிறிய படுக்கையறையில் தான். சமயங்களில் அந்த அறையிலேயே கட்சி முன்னோடிகளை அவர் சந்திப்பதும் உண்டு. அந்த அறையில் இருந்து வெளியில் வந்தால், சிறிய நடைபாதை இருக்கும் அதில் தான் தன்னைப் பார்க்க வரும் முக்கியஸ்தர்களைச் சந்திப்பார்.

காலையிலேயே சென்று விட்டால் கருணாநிதியை வீட்டில் பார்த்து தங்கள் கோரிக்கைகளை நேரில் மனுவாக அளிப்பது பொதுமக்களுக்கு எளிதான ஒன்று. அனைத்து மனுக்களையும் வாங்கிக் கொள்வதோடு, தொடர்ந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிப்பார், இதுவே பலரையும் அவர் தொடர்பில் நெகிழ்ச்சிக்குட்படுத்தியிருந்தது.

இதையடுத்து முதலமைச்சராக இருந்த போது நேராக தலைமைச் செயலகம் சென்று விடுவார். மற்ற காலங்களில் வீட்டில் இருந்து புறப்படும் கருணாநிதி நேராக முரசொலி அலுவலகம் செல்வது வழக்கம். அங்கு பத்திரிகைகளில் வர வேண்டிய செய்திகள் குறித்து ஆலோசித்து விட்டு, பின்னர் மற்ற வேலைகளை கவனிப்பார். இதற்கிடையே, சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் தவறாது கலந்து கொள்வார்.

மதிய சாப்பாட்டிற்கு சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தியம்மாள் வீட்டிற்கு சென்று விடுவார். அசைவப் பிரியரான அவர், பெரும்பாலும் மதிய நேரத்தில் விறால் மீன், கறி ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்த்து வந்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவத்திற்கு மாறினார். ஆனால், எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அளவாக சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

மதிய உணவுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடும் வழக்கம் கருணாநிதிக்கு உண்டு. பின்னர் எழுந்ததும் ஒரு தேநீர் அருந்திவிட்டு, மாலை நாளிதழ்களை ஒரு பார்வை பார்ப்பார். அதனைத் தொடர்ந்து அறிவாலயம் செல்வார். அங்கு தொண்டர்கள் மற்றும் கட்சியினரைச் சந்தித்து உரையாடுவார்.

இரவு மீண்டும் கோபாலபுரம் வீடு திரும்பி இரவு உணவைச் சாப்பிடுவார். அதன்பிறகு சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்த்து விட்டு, பின்னர் தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடுவார். அதனைத் தொடர்ந்து தனது படுக்கையறைக்குச் சென்று புத்தகங்கள் வாசித்து விட்டு, இரவு 12 மணியளவில் உறங்கச் செல்வார். சமயங்களில் வாசிப்பு, எழுத்து என அவரது தூக்கம் 12 மணியையும் தாண்டும். இரவில் எவ்வளவு தாமதமாக உறங்கச் சென்றாலும், அதிகாலை 4.30 மணிக்கே மீண்டும் உதய சூரியன் உதித்து விடும் அவருக்கு.