ஜெயலலிதா மரணத்தில் காலங் கடந்து வெடிக்கும் சர்ச்சைகள்!! வெளிவருமா உண்மைகள்?

Report Print Dias Dias in இந்தியா

ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்டிருந்த எக்மோ கருவியை அகற்ற சொன்னது யார் என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை கமிஷன் இன்று விசாரணை நடத்தவுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையம் சார்பில் ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், அரசு டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என இதுவரை 85 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முழு உண்மையை வெளியே கொண்டு வரும் வகையில் முக்கிய நபர்களிடமும் ஆணையம் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே எய்ம்ஸ் டாக்டர்கள் ஜி.சி. கில்னானி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகிய மூன்று பேரும் ஆஜராக ஆணையம் சார்பில் கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, எய்ம்ஸ் டாக்டர்கள் வர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிந்து கொள்ள எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை தந்தனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்,தினமும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ அறிக்கை குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

அப்போலோ டாக்டர்கள் உடன் எய்ம்ஸ் டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல கட்டமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. எய்ம்ஸ் டாக்டர்கள் கடந்த 2016 டிசம்பர் 3ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றனர்.

அன்றைய தினத்தில் ஜெயலலிதாவுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை தேறி வருவதாகவும் எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மறுநாள் அதாவது டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் தான் ஜெயலலிதாவுக்கு பல கட்ட சிகிச்சை அளித்த பிறகும், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை எனக்கூறி எக்மோ கருவியை அகற்றுமாறு அப்போலோ டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகே ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்பட்டதாக அப்போலோ டாக்டர்கள் ஏற்கனவே சாட்சியம் அளித்தனர்.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், எய்ம்ஸ் டாக்டர் நிதிஷ் நாயக் ஆஜராகியுள்ளார்.

எஞ்சிய 2 பேரும் இன்று நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகின்றனர்.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த விசாரணைக்கு பிறகு நாளை காலை 9 மணியளவில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எய்ம்ஸ் டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்யவுள்ளார்.