ஏழு தமிழர்களின் விடுதலை! ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?

Report Print Murali Murali in இந்தியா

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் ஆளுநர் காலம் கடத்தி வருவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சரவை கூடி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய தீர்மானித்து, ஆளுநருக்கும் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஏழு பேரின் விடுதலை தொடர்பில் ஆளுநர் காலம் கடத்தி வருகின்றமையானது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உச்சி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தமிழக அரசு முடிவு எடுத்த பிறகும் கூட ஆளுநர் இன்னும் அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பு செய்வது எந்த வகையிலும் நியாயம் ஆகாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்டின் உச்சபட்ச சட்டவியல் அமைப்பான உச்சநீதிமன்றமே, தமிழக அரசு தனது முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்து விட்ட பிறகு, இன்னும் எதற்காக தமிழக அரசின் முடிவை அமுல்படுத்த ஆளுநர் தயங்குகிறார் என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.

உச்சநீதிமன்றம் கூறியதையும் ஏற்க மாட்டோம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாநில அரசு முடிவையும் ஏற்க மாட்டோம் என்று சிலர் கூறுவதை வைத்து பார்த்தால் இங்கு சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.