பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் திடீர் சிக்கல்

Report Print Tamilini in இந்தியா

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக கவர்னர் நேற்று அனுப்பி வைத்தார்.

இதனால் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் விடுதலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.

இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், மத்திய அரசு இவர்களை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டியது. இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி உச்ச நீதிமன்றம், `ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு’ என்று தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரை `முன் விடுதலை செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பரிந்துரை கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு கடந்த ஞாயிறு மாலையே அனுப்பி வைத்தது. இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட தமிழக கவர்னர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடுவார் என்று பரவலாக கருத்து நிலவியது. ஆனால் கடந்த 5 நாட்களாக தமிழக கவர்னர் அரசின் தீர்மானத்தின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை அறிக்கையை நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கவர்னர் மாளிகையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகஅமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை அளித்துள்ளது. இதுகுறித்து கவர்னர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாட்டின் பிரதமரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த பிரச்னையை கவர்னர் கவனமாக கையாள்வார்.

தற்போது, தமிழக அரசின் பரிந்துரையை தமிழக கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். காரணம், இந்த 7 பேர் விடுதலையில் தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது.

அதேபோன்று தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரும் இவர்களது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகள் உள்ளதால், அனைவரிடமும் கலந்து ஆலோசித்த பிறகு தமிழக கவர்னர் பன்வாரிலால் ஒரு முடிவை எடுப்பார்.

தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் என்ன முடிவு எடுக்கிறதோ அந்த முடிவின்படிதான் தமிழக கவர்னரும் செயல்படுவார்” என்றார்.

தமிழக கவர்னரின் இந்த முடிவால், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Dina Karan

Latest Offers