ஒரே இரவில் இலங்கை அரசில் நடந்துள்ள மாற்றங்கள்! பின்னணியில் பல மர்மங்கள்

Report Print Nivetha in இந்தியா

அநீதியான முறையில் மஹிந்த ராஜபக்ச திடீரென பிரதமர் பொறுப்பேற்றிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கை அரசில் நடைபெற்றுள்ள இந்தத் தலைகீழ் மாற்றங்கள், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் நடத்திய டெசோ மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் குறித்து முழுமையாகவும் சுதந்திரமாகவும் விசாரணை நடத்தி, அதற்குரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் கலைஞர் அவர்களின் உத்தரவுப்படி ஐ.நா.மன்றத்தில் நேரில் சென்று அளித்துள்ளேன்.

தமிழர்கள் வெகுகாலமாக நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அநீதியான முறையில் ராஜபக்ச திடீரென பிரதமர் பொறுப்பேற்றிருப்பது ஈழத் தமிழர்கள் நெஞ்சில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு மகிந்த இந்தியாவுக்கு வருகை தந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

அதுபோல, ரணில் விக்ரமசிங்கவும் இந்தியாவுக்கு வருகை தந்தார். ராஜபக்சேவின் வருகையின்போது அரசியல் காழ்ப்புணர்வுடன் பேட்டிகள்,செய்திகள் வெளியிடப்பட்டன.

அதே சூழலில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொல்வதற்கு இந்திய உளவுப் பிரிவான றோ அமைப்புத் திட்டமிட்டிருப்பதாக இலங்கையில் செய்திகள் வெளியாயின.

பின்னர் மறுப்பறிக்கையும் அவசரமாகத் தரப்பட்டது. எனினும், இது தொடர்பாக அந்நாட்டில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவை மையப்படுத்தி இலங்கை அரசியல் பிரமுகர்களின் பயணங்களும் குற்றச்சாட்டுகளும் வெளியான நிலையில், பிரதமர் பொறுப்பில் ரணில் விக்ரமசிங்க நீடிக்கும் நிலையிலேயே, பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்ச திடீர் பிரதமராகப் பொறுப்பேற்றிருப்பதன் பின்னணி தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

இலங்கை தொடர்பான வெளிநாட்டு உறவு மற்றும் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடக்கும் பனிப்போரின் பின்னணியில் இலங்கை அரசில் இந்த திடீர் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆங்கில ஊடகங்களும் அயல்நாட்டு செய்தி நிறுவனங்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

இத்தகைய நிலை தொடருமானால் அது இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு சவாலாக அமையும் ஆபத்து உண்டு என்ற கவலையும் பிரதமருக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

ஒரே இரவில் இலங்கை அரசில் நடந்துள்ள மாற்றங்கள் பல மர்மங்களை உள்ளடக்கிய நிலையில், அவை அனைத்துமே வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.