சட்டவிரோத குடியேறிகளை பாஜக அரசு கடலில் தூக்கி வீசும்! தேர்தல் பரப்புரையில் அமித் ஷா

Report Print Murali Murali in இந்தியா

இந்தியா எங்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை வங்காள விரிகுடாவில் தூக்கி வீசுவோம் என ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து வறுமை காரணமாக இந்தியாவுக்குள் நுழையும் முஸ்லிம் குடியேறிகளையே அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

மேற்கு வங்கத்தில் நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “வங்காள மண்ணில் ஊடுருபவர்கள் கரையான்களை போன்றவர்கள்.

பாஜக அரசு அவர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து வங்காள விரிகுடாவுக்குள் வீசும்” எனக் கூறியிருக்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நேரத்தில் இப்பேச்சு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அதே சமயம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என அமித் ஷா தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.

“வகுப்புவாத கொதிப்பினை தொடர்ந்து தூண்டிவிட்டு, இந்தியாவில் நிரந்தர மத பிளவை ஏற்படுத்துவதை பாஜக அரசியல் வியாபாரமாகவே செய்து வருகிறது,” என காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய் ஜா விமர்சித்திருக்கிறார்.

இதே போல், ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்தும் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து முன்வைத்து வருகின்றது. மியான்மரில் உள்ள இராணுவ அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர்.