காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தெரிவு

Report Print Jeslin Jeslin in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் வெகு நேரமாக நடந்த கட்சியின் காரியக்கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காங்கிரஸின் தலைவர் பொறுப்புக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது வந்ததுடன் குறித்த எதிர்பார்ப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

மக்களவை தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்ததில் இருந்து, அதன் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் உள்ளார். தேர்தலில் மூத்த தலைவர்கள் யாரும் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக முன் வைக்கப்பட்டன.

இதன்பின்னர், ராஜினாமா கடிதத்தை அளித்த ராகுல், அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அடுத்த தலைவராக மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இந்த நிலையில் இன்று தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதன் முடிவில் சோனியா காந்தி கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடந்த காரியக் கமிட்டி கூட்டத்தில் ராகுலின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் முகுல் வாஸ்னிக் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதேபோன்று முந்தைய மோடி அரசின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்து பாஜக அரசை கடுமையாக எதிர்த்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தலைவராகும் வாய்ப்பு காணப்பட்டது.

முன்னதாக கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதில் பங்கேற்பதை ராகுலும், சோனியாவும் தவிர்த்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோனியா தாங்கள் அங்கு இருப்பது தலைவர் தேர்வில் திருப்பத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் வெளியேறியதாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் காரியக் கமிட்டி சோனியாவை தலைவராக தேர்வு செய்துள்ளது.