ப.சிதம்பம் அதிரடியாக கைது! சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

Report Print Murali Murali in இந்தியா

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய டில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இன்று அனுமதியளித்துள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டில்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது.

அதனையடுத்து, முன் பிணை கோரி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை வெள்ளியன்று விசாரிப்பதாக தெரித்த நிலையில்,ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர், டில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்திற்கு இன்று மதியம் அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி அஜய் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே நீதிபதி ப.சிதம்பரத்தை சிபிஐ தடுப்பு காவலில் வைத்து விசாரிணை செய்ய அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன், தனது குடும்பத்தினரையும், சட்டத்தரணியையும் தினமும் 30 நிமிடம் சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2007ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சிபிஐ ஒரு வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கில் முன் பிணை கோரி ப.சிதம்பரம் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இடைக்கால நிவாரணம் அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.

எனினும், உச்சநீதிமன்றமும் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டது. இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.