ராஜீவ் காந்தியை போல் மோடியும் கொல்லப்படுவார்! அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

Report Print Murali Murali in இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் போல், அந்த நாட்டின் சமகால பிரதமர் நரேந்திர மோடியும் கொலை செய்யப்படுவாரென அச்சுறுத்தல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவகமொன்றில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தார். இந்நிலையிலேயே, கொலை அச்சுறுத்தல் தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சென்னை வேப்பேரியில் இயங்கும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு அழைப்பு வந்தது. இதன்போது போது பேசிய நபர்,

“பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடியை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய சிலர் திட்டமிட்டிருப்பதாகவும், அவர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுபோல மோடியையும் கொலை செய்ய திருவான்மியூர் ஆா்.டி.ஓ. அலுவலகம் அருகே பதுங்கியிருப்பதாகவும்” கூறினார்.

இந்த தகவல் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சைபர் குற்றப்பிரிவு பொலிஸாருக்கும், திருவான்மியூர் பொலிஸாருக்கும் அச்சுறுத்தல் அழைப்பு குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அச்சுறுத்தல் விடுத்த நபர் திருவான்மியூர் திருவள்ளூவர் நகர் பகுதியைச் சேர்ந்த பாஜக.வின் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு பிரிவு செயலர் திருநாவுக்கரசு என்பது தெரியவந்தது.

உடனடியாக சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் போது,

“பிரதமர் மோடிக்கு பொலிஸார் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக” வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.