குழந்தையின் அழுகை சத்தம் கேட்கவில்லை! தலையை சுற்றி மண்சரிவு - பதற்றத்தின் மத்தியில் நகரும் நிமிடங்கள்

Report Print Sujitha Sri in இந்தியா

திருச்சி - மணப்பாறையில், நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் சுமார் 13 மணித்தியாலங்களுக்கு மேலாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தின் தலையை சுற்றி மண் சரிந்துள்ளதாகவும், சுர்ஜித்தின் அழுகை சத்தம் எதுவும் கேட்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித் நேற்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இது தொடர்பில் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது குழந்தையை மீட்பதற்காக கயிறு மூலம் அவரின் கையில் சுருக்கு போடப்பட்டது. ஒரு கையில் சுருக்கு போட முடிந்த போதும் மற்றைய கையில் போட முடியவில்லை என தெரியவருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை மீட்பதற்காக பக்கவாட்டில் குழி தோண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு தடையின்றி ஒட்சிசன் வழங்கப்பட்டு வந்ததால் அனைவரும் நிம்மதியாக இருந்து வந்தனர்.

இரவு நேரத்தில் குழந்தை பயந்துவிட கூடாது என்பதற்காக அவரின் அம்மா மேரி குழந்தையுடன் பேசிய போது, "அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே" என அவர் கூற குழந்தை "உம்" என்று பதிலளித்துள்ளார்.

எனினும் நேரம் செல்லச்செல்ல குழந்தை சோர்வாகி விட பெற்றோர் பதற்றமடைந்துள்ளனர்.

இப்படியான சந்தர்ப்பத்திலேயே ஆழ்துளை கிணற்றுக்குள், குழந்தையின் தலையை சுற்றி மண் சரிந்துள்ளதாகவும் இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரம், தற்போது சுஜித்தின் சத்தம் கேட்கவில்லை என்றும், குழந்தையின் நிலைமையை கண்டு தாயாரான கலாமேரி திடீரென மயக்கமடைந்துள்ளதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் ஒவ்வொரு நொடியும் பதற்றத்தின் மத்தியில் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,

குழந்தையின் அழுகை சத்தம் இப்போது கேட்கவில்லை என்ற போதும் கூட அவரிடம் அசைவு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தலைமேல் மண் சரிந்திருக்கிறது. அதனால், ஒட்சிசன் செலுத்துவதில் சிரமம் உள்ள போதும் முடிந்தவரை ஒட்சிசன் அனுப்பப்படுகிறது.

சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள், நோயாளர் காவு வண்டி என்பன தயார் நிலையில் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...