ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித்தை மீட்பதில் இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் தருணம்! விஜயபாஸ்கர்

Report Print Jeslin Jeslin in இந்தியா

தமிழ்நாடு, திருச்சி - நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணியில் இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் தருணத்தில் நாம் இருக்கின்றோம் என தமிழக சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் செய்தியாளர்களிடம் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பாறைகள் தோண்டத் தோண்ட கடினமாக இருக்கின்றன. இதுவரை இவ்வளவு கடினமான பாறைகளைப் பார்ததே இல்லை. ஒரே மாதிரியான பாறைகளே தோண்டத் தோண்ட இருக்கின்றன. பாறைகளைத் தோண்டும் ரிக் இயந்திரத்தால் இனியும் முன்னேறிச் செல்ல இயலுமா எனத் தெரியவில்லை.

ரிக் இயந்திரத்தால் தோண்டும் பணி பலனளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முதல் ரிக் இயந்திரம் இத்தாலியைச் சேர்ந்தது. இரண்டாவது ரிக் இயந்திரம் ஜெர்மணியைச் சேர்ந்தது. இந்த இரண்டு ரிக் இயந்திரங்களும் செயல்பட்டே பாறைகளைத் தாண்டிச் செல்வது கடினமாக இருக்கிறது.

அதனால், மாற்று வழி குறித்து துணை முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கின்றோம்.

குழந்தை விழுந்து 4 நாட்களாகிவிட்ட நிலையில் மருத்துவர்களிடமும் ஆலோசனை செய்யவுள்ளோம். மீட்புப் பணியில் அனைத்து நிலைகளையும் ஆலோசித்து இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் சூழலில் இருக்கிறோம்.

குழந்தையின் பெற்றோரிடமும் பேசியிருக்கிறோம். நிலைமையை எடுத்துரைத்திருக்கிறோம். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களை அழைத்திருக்கிறோம். பேரிடர் மீட்புக் குழுவினர், நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையுடன் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்,

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் இரண்டு வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், குழந்தை அதே இடத்தில நீடிப்பதாகவும், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பகுதி பாறை நிறைந்த பகுதி என்பதால் மீட்புப்பணி பெரும் சவாலை சந்தித்து வருகிறது.

குழந்தை சுர்ஜித் கமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 40 அடி வரை குழி தோண்டப்பட்ட நிலையில், முழுமையாக குழி தோண்ட 12 மணி நேரமாகும் என்று தெரிவித்தார்.

மேலும், ஒரு மணி நேரத்தில் 500 சென்றி மீற்றர் ஆழம் செல்வதுடன் இந்த பணியை கண்டிப்பாக கைவிட மாட்டோம். தவறான தகவல்கள் பரவக்கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாக இருக்கின்றது.

பதிய பள்ளத்தால் குழந்தை மீது மண் விழுந்துள்ளது, பலூன் தொழில்நுட்பம் மூலம் மீட்பதிலும் சிரமம் உள்ளது.

குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற கவனத்தில் மீட்புப்பணி நடந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.